மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் உள்ள முன்பள்ளி ஆசிரியர்களின் அர்ப்பணிப்பான சேவையைப் பாராட்டும் முகமாக சர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மண்டபத்தில் கடந்த 06 ஆம் திகதி கெளரவிப்பு நிகழ்வு ஒன்று இடம்பெற்றது.
மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.வாசுதேவன் தலைமையில் இடம்பெற்ற இந்த முன்பள்ளி ஆசிரியர்களுக்கான கெளரவிப்பு நிகழ்வில், 5 வருடங்களுக்குமேல் சேவையாற்றிய மண்முனை வடக்கு பிரதேசத்தைச் சேர்ந்த 150 க்கும் மேற்பட்ட முன்பள்ளி ஆசிரியர்கள் அனைவருக்கும் இதன் போது சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
30 வருட சேவையைப் பூர்த்திசெய்து 60 வயதைக் கடந்து ஓய்வுபெற்ற முன்பள்ளி ஆசிரியர்களுக்கு நினைவுக் கேடயமும் வழங்கப்பட்டதுடன் முன் பள்ளி ஆசிரியர்களினால் நடனம் மற்றும் வில்லுப்பாடல் என்பன இசைக்கப்பட்டது.
சிரேஸ்ட முன்பள்ளி ஆசிரியர் இந்திராணி புஸ்பராஜா கருத்து தெரிவிக்கையில் குழந்தைகளுக்கு சிறந்த நற்பண்புகள் மற்றும் வாழ்வை கற்றுக்கொடுக்க வேண்டும் என்பதுடன் ஆசிரியர்கள் சிறார்களுக்கு சிறந்த வழிகாட்டியாக அமைய வேண்டும் என்றார்.
இந் நிகழ்வின் போது மண்முனை வடக்கு உதவி பிரதேச செயலாளர்களான சியாஹூல் ஹக், திருமதி.தட்சண்யா பிரசந்தன், திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.பிறனவசோதி, பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி கணேசமுர்த்தி, சமுர்த்தி தலைமையக முகாமையாளர் பரமலிங்கம், முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி இணைப்பாளர் வீ.முரளிதரன், கிராம சேவை நிர்வாக உத்தியோகத்தர் கே.ராஜன், முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் தி.மேகராஜா, பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
அதேசமயம் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட உதவி கல்வி பணிப்பாளர் புவிராஜசிங்கம் ஓய்வு பெற்று செல்வதனால் முன்பள்ளி ஆசிரியர்களினால் நினைவுச்சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.