மட்டக்களப்பில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மற்றும் நிகழ்நிலை காப்பு சட்டம் ஆகியவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து கவன ஈர்ப்பு பேரணியும், போராட்டமும் இன்று (10) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகிலிருந்து பேரணியானது ஆரம்பமாகி காந்திபூங்காவில் உள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் ஞாபகார்த்த இடம் வரையில் சென்று அங்கு எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றது.
கிழக்கு மாகாண சிவில் சமூகம் என்ற அமைப்பின் ஊடாக இலங்கை அரசானது உடனடியாக அடக்குமுறை சட்டங்களை மீளப்பெறவேண்டும் என்ற தொனிப்பொருளில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கிழக்கு மாகாண சிவில் சமூகம் சார்பாக முகமட் புஹாரி தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் பெருமளவான பொதுமக்கள் கலந்துகொண்டு பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு பேரணியை முன்னெடுத்திருந்தார்கள்.