பணிக்கு வராத மற்றும் கடந்த புதன்கிழமை தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட்ட அரச மற்றும் ஏனைய அனைத்து ஊழியர்களுக்கும் ஒரு நாள் ஊதியக் குறைப்பை விதிக்க தொழில் அமைச்சு முடிவு செய்துள்ளது. இந்த விடயத்தை வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்-தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து ஊழியர்களுக்கும்
எதிராக தேவையான சட்ட நடவடிக்கையும் அமைச்சினால் மேற்கொள்ளப்படும்.எதிர்காலத்தில், அரசியல் நிகழ்ச்சி நிரல்களின் அடிப்படையில் அரச நிறுவனங்களின் செயற்பாடுகளை சீர்குலைக்கச் சில பிரிவுகள் மேற்கொள்ளும் முயற்சிகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். அந்தந்த தொழிலில் உள்ள சில பிரச்னைகள் தொடர்பான தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்வது வேறு விடயம். எனினும், இவை அரசியல் உள்நோக்கம் கொண்ட தொழிற்சங்க நடவடிக்கைகளாகும்.
தொழிலாளர் அமைச்சர் என்ற முறையில் உண்மையான தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு எனது ஆதரவை வழங்குவேன். எனினும் அரசியல் உள்நோக்கம் கொண்ட தொழிற்சங்க நடவடிக்கைகள் மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களில் ஈடுபடுபவர்கள் அரசுத்துறை வேலைகளில் சேர அனுமதிக்கப்படமாட்டார்கள் – என்றார்.