மக்களும் சர்வதேசமும் எனது பக்கம் – எனவே, தொழில்சங்க போராட்டங்களால் அரசாங்கத்தை வீழ்த்த முடியாதென்று ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருக்கின்றார். தொழில் சங்கங்களும் எதிர் கட்சிகளும் போராட்டங்களை தீவிரப்படுத்தப் போவதாக எச்சரித்து வருகின்ற சூழலில்தான் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்திருக்கின்றார்.
நாடு பொருளாதார ரீதியிலும் அரசியல் ரீதியிலும் திவாலாகியபோதுதான் ஓர் ஆசனத்துடன் இருந்த ரணில் விக்கிரமசிங்க எவருமே எதிர்பாராத வகையில் ஜனாதிபதியானார்.கிட்டத்தட்ட அரசியலில் காணாமல் போய்விட்டாரென்று எண்ணிக் கொண்டிருந்த சூழலில் நாட்டை வீழ்ச்சியிலிருந்து மீட்கக்கூடிய அவதாரமாக ரணில் காட்சியளித்தார்.கோட்டாபய ராஜபக்ஷவால் நாட்டை முன்கொண்டு செல்ல முடியாதென்று கருதப்பட்ட சூழலில், அடுத்தது யாரென்னும் கேள்விக்கு அப்போது சில பதில்கள்
முன்வைக்கப்பட்டன.
அதில் முதன்மையான பெயர் சஜித் பிரேமதாஸ.ஆளும் தரப்பால் முடியாமல் போகும்போது எதிர்க்கட்சிதான் நாட்டை பொறுப்பெடுக்க வேண்டும்.ஆனால், சஜித் பிரேதாஸவிடமிருந்து அந்த ஆளுமை வெளிப்படவில்லை.ஒருவேளை சஜித் உடனடியாக நாட்டைப் பொறுப்பெடுக்க முன்வந்திருந்தால் ரணில் விக்கிரமசிங்கவின் நகர்வுகள் தோல்வியடைந்திருக்கலாம்.மற்றவர்கள் தயங்கிக் கொண்டிருந்தபோது ரணில் அந்த சந்தர்ப்பத்தை மிகவும் புத்திசாதுர்யமாகவும் தந்திரமாகவும் பயன்படுத்திக்கொண்டார்.
அரசியல் நெருக்கடிகளை கையாள்வதில்தான் ஒருவரின் தலைமைத்துவம் வெளிப்படும்.
ரணில் நீண்ட அரசியல் அனுபவத்தையும் புத்திக்கூர்மையையும் கொண்டிருந்தபோதும் ஜனவசியமுள்ள தலைவராக ஒருபோதுமே இருந்ததில்லை.
ஜனவசியமின்மைதான் ரணிலால் ஜனாதிபதியாக முடியாமல் போனமைக்கான பிரதான காரணமாகும்.
ஆனால், தற்போது நாட்டின் நெருக்கடி நிலைமை ரணிலை ஓரளவு ஜனவசியமுள்ளவராக உயர்த்தியிருக்கின்றது.முழுமையாக இல்லாவிட்டாலும்கூட, இன்றைய சூழலில் ரணிலால்தான் சில விடயங்களை சாதிக்க முடியும், நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் என்னும் பார்வையொன்று சிங்கள மக்கள் மத்தியில் அதிகரித்திருக்கின்றது.
அதேவேளை சர்வதேச சமூகத்துக்கும் பரீட்சயமான, குறிப்பாக அமெரிக்க மற்றும் மேற்குலகத்தின் ஆதரவை பெற்றவாராக இருப்பதும் தனக்கு சாதகமான ஒன்றாக இருப்பதாகவே ரணில் கருதுகின்றார்.
ரணில் கூறுவதில் தவறில்லை. இன்றைய சூழலில் ஒப்பீட்டடிப்படையில் மேற்குலகத்துக்கு முன்னால் ஒரு தெரிவு இருக்குமென்றால், அது நிச்சயம் ரணில் விக்கிரமசிங்க மட்டும்தான்.
ரணிலை தவிர்த்து பிறிதொருவரை நோக்குமளவுக்கு வேறு எவருமில்லை.இந்தப் பின்புலத்தில்தான் ரணில் சர்வதேசம் தனது பக்கமாக இருப்பதாகக் கூறுகின்றார். இலங்கையை மாறிமாறி ஆட்சிசெய்த கட்சிகளில் ஐக்கிய தேசியக் கட்சி கொள்கையளவில் மேற்கு சார்பான கட்சியாகவும் சிறீ லங்கா சுதந்திரக் கட்சி நடுநிலைமை கொள்கையை கடைப்பிடித்த கட்சியாகவும் இருந்திருப்பதே வரலாறு.
ஆனால், 2020 தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வரலாற்று தோல்வியை சந்தித்தபோது இலங்கைத் தீவின் தாராளவாத அரசியலில் பெரும் பின்னடைவு ஏற்பட்டது.
2005 ஜனாதிபதி தேர்தலில் ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியை வெற்றிபெறச் செய்ய வேண்டுமென்பதில் அமெரிக்கா கரிசனை காண்பித்திருந்தது.குறிப்பாக, அப்போதிருந்த அமெரிக்க உதவி இராஜாங்க செயலர் ரிச்சர்ட் ஆமிட்ரேஜ் பிரத்தியேக ஈடுபாட்டை காண்பித்திருந்தார்.
ஆனால், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தேர்தல் பகிஷ்கரிப்பு நகர்வால் ஆமிட்ரேஜின் நகர்வுகள் தோற்கடிக்கப்பட்டன.
இதன் விளைவுகளை பின்னர் புலிகள் அனுபவித்தனர்.2006இல் ஐரோப்பிய ஒன்றியம், கனடா ஆகியவை விடுதலைப் புலிகள் அமைப்பை சர்வதேச பயங்கரவாத அமைப்பாக தடை செய்தன.
யுத்தம் முடிவுற்று 13 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில்கூட விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடை இப்போதும் தொடர்கின்றது.யுத்தம் முடிவுற்று 6 வருடங்களின் பின்னர்தான் 2015இல், ரணில் விக்கிரமசிங்க, அதிகாரமுள்ள பிரதமராக வரமுடிந்தது.தற்போது, மக்கள் ஆதரவுடன் ஜனாதிபதியாக வருவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன. இந்த நிலையில் ரணிலை விடுத்து மேற்கு உலகால் வேறு எவரை ஆதரிக்க முடியும்.