தமிழ்மொழி பேசுவோர் சுமார் 75 வீதம் வாழ்கின்ற திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் மொழிக்கு உரிய அந்தஸ்து வழங்கப்படாமை குறித்து மிகவும் கவலையடைகின்றேன் என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார்.
நேற்றைய தினம் (17) இடம் பெற்ற திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
திருகோணமலை மாவட்டத்தில் தமிழை தாய்மொழியாகக்கொண்ட தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் சுமார் 75 வீதத்திற்கும் மேல் வாழ்கின்றனர்.
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திற்கு சமூகமளிக்கும் அதிகமான அதிகாரிகளும் தமிழ் மொழி பேசுபவர்களாகவே இருக்கிறார்கள்.
ஆனால் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் அதிகமான விடயங்கள் சிங்கள மொழியிலேயே முன்னெடுக்கப்படுகின்றது.
இங்கு மொழிபெயர்ப்பாளர்கள் எவரும் நியமிக்கப்படாமல் இருப்பதால் அதிகாரிகள் தமது கருத்துக்களை சரியாக முன்வைப்பதிலும் இடர்பாடுகளை அனுபவிப்பதை அவதானிக்கமுடிகின்றது.
கடந்த நல்லாட்சி அரசாங்க காலத்தில் இருமொழிகளுக்கும் சம அந்தஸ்து வழங்கப்பட்டு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் நடத்தப்பட்டன, மொழிபெயர்ப்பாளர் ஒருவரும் நியமிக்கப்பட்டு மொழிபெயர்ப்பு செய்யும் வசதிகளும் செய்யப்பட்டன.
இதன் மூலமாக அனைவரும் தமது கருத்துக்களை தெளிவாகச் சொல்லவும், கேட்கவும் முடிந்தது என்று அவர் தெரிவித்தார்.
ஆனால் தற்போது அந்த நிலை மாற்றமடைந்து, தமிழ்மொழி புறக்கணிப்படுவது மிகவும் கவலையளிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த பிழையை தான் உணர்வதாகவும், எதிர்வரும் கூட்டங்களில் இந்த குறைகள் நிவர்த்தி செய்யப்படும் எனவும் அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாராச்சி இதன் போது பதிலளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.