கடந்த 7 ம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் கடுமையான தாக்குதலை நடத்தினர். இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேல் மக்களிடம் மேற்கொள்ளப்பட்ட சர்வேயில் 80 சதவீதம் பேர் அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை எதிராக திரும்பி இருப்பது தெரியவந்துள்ளது.
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே கடந்த 7 ம் தேதி கடும் மோதல் தொடங்கியது. பாலஸ்தீன விடுதலை அமைப்பான ‘ஹமாஸ்’ தீவிரவாதிகள் இஸ்ரேல் மீது மிக கடுமையான தாக்குதலை நடத்தினர். 20 நிமிடங்களில் 7 ஆயிரம் ஏவுகணைகளை ஏவி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர்.
இது தவிர இஸ்ரேலுக்கு நுழைந்து அவர்கள் கடும் தாக்குதைலை நடத்தினர். தங்களின் கண்ணில் பட்ட பொதுமக்களை அவர்கள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதனால் ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர். அதோடு 200க்கும் அதிகமானவர்கள் பிணைக்கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர்.
இஸ்ரேலின் கடந்த 75 ஆண்டு கால வரலாற்றில் இது மோசமான தாக்குதலாக பார்க்கப்படுகிறது. இதையடுத்து தான் இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது. இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு போர் தொடங்கியதாக கூறி காசா மீது உக்கிரமான வான்வெளி தாக்குதலை தொடங்கினார். இந்த தாக்குதல் 2வது வாரமாக தொடர்ந்து வருகிறது. தற்போது வான்வெளி தாக்குதல் நடத்தும் நிலையில் வரும் நாட்களில் காசா நகருக்குள் புகுந்து தரைவழி தாக்குதல் நடத்தி இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது.
தற்போதைய சூழலில் சுகாதாரத்துறை தகவலின்படி இஸ்ரேல் தாக்குதலில் பாலஸ்தீனத்தில் 4,237 பேர் பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 8 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. அதோடு 2 வாரத்தில் மட்டும் இருதரப்பிலும் மொத்த பலி என்பது 6 ஆயிரத்தை கடந்துள்ளதாகவும், காயமடைந்தோர் எண்ணிக்கை என்பது 15 ஆயிரத்தை தொட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே தான் காசாவில் வன் வெளி தாக்குதலை நடத்தி வரும் இஸ்ரேல் போர் விதிகளை மீறி மருத்துவமனை, வழிபாட்டு தலங்கள் மற்றும் குடியிருப்புகள் மீது வான்வெளி தாக்குதல் மூலம் குண்டு போட்டு வருவதாக ஹமாஸ் தீவிரவாதிகளும், ஹமாசுக்கு ஆதரவு வழங்கும் அமைப்புகள் கூறி வருகின்றன. இந்நிலையில் தான் இந்த போர் நடவடிக்கைக்கு மத்தியில் இஸ்ரேலில் சர்வே ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. அக்டோபர் 18 மற்றும் 19 ம் தேதி என 2 நாட்கள் எடுக்கப்பட்டது. இதில் 510 பேர் ஓட்டளித்தனர். இந்த சர்வே Ma’ ariv பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி கடந்த 7ம் தேதி காசாவின் ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பொறுப்பு ஏற்க வேண்டும் என சர்வேயில் பங்கேற்ற 80 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். மேலும் அவர்கள் ஹமாஸ் தாக்குதலில் இருந்து இஸ்ரேலை காக்க பெஞ்சமின் நெதன்யாகு தவறிவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
அதோடு 65 சதவீதம் பேர் காசாவில் தரைவழி தாக்குதலை நடத்த வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளனர். இதுமட்டுமின்றி தற்போதைய பிரதமர் நெதன்யாகுவை விட முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் பென்னி கான்ட்ஸ் சிறந்த பிரதமராக செயல்பட வாய்ப்புள்ளது என மக்கள் தெரிவித்துள்ளனர். அதாவது பென்னி கான்ட்ஸ் சிறந்து பிரதமராக இருப்பார் என 48 சதவீதம் பேரும், நெதன்யாகு தான் சிறந்த பிரதமர் என 28 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.