இலங்கையின் ஜனாதிபதி பதவியென்பது சக்திமிக்கது. காலஞ் சென்ற ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் வார்த்தையில் சொல்வதனால் – ஆணை பெண்ணாகவும், பெண்ணை ஆணாகவும் மாற்றுவதைத் தவிர, ஏனைய அனைத்தும் செய்யும் அதிகாரம் கொண்டது.
அந்தக் கதிரையை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டுமென்பதே பல சிங்கள அரசியல்வாதிகளது கனவாக இருக்கின்றது. இந்த நிலையில் 2005இல், அந்தக் கதிரையை தொட்டுவிடுவதற்கான வாய்ப்புக்கள் இருந்தும், தமிழ் மக்களின் வாக்குகளை பெற முடியாத நிலையில் ரணில் விக்கிரமசிங்க தோல்வியடைந்தார். எனினும், பொருளாதார நெருக்கடியின் விளைவாகவும், அப்போதைய ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்ஷவின் இயலாமையினாலும் ரணிலின் நீண்டகால கனவு நிறைவேறியது. ஆனாலும் ஒரு குறையுண்டு.
ரணில் எதிர்பார்த்தது போன்று, மக்களின் ஆதரவுடன் அந்தக்கதிரையை கைப்பற்ற முடியவில்லை. இந்த நிலையில் மக்களின் ஆதரவுடன் அந்தக் கதிரையில் அமர்ந்துவிட வேண்டுமென்னும் இலக்குடன் ரணில் காய்களை நகர்த்திக் கொண்டிருக்கின்றார். இந்த நிலையில் தமிழ் மக்களின் பிரச்னைகள் மீது கரிசனையுடன் இருப்பதாகவும் ரணில் அவ்வப்போது கூறிவருகின்றார். அரசியலமைப்பிலுள்ள 13ஆவது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்தப்போவதாக கூறினார். தொல்பொருள் திணைக்களத்தின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கான உத்தரவுகளை வழங்கினார்.
அண்மையில் மட்டக்களப்பு மேய்ச்சல் தரை விவகாரத்தின் வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு வேறு இடங்களில் காணிகளை வழங்குமாறு உத்தரவிட்டிருந்தார். ஆனால், எந்தவொரு விடயமும் நடைமுறைக்கு வரவில்லை. இந்த நிலையில் ரணிலின் உத்தரவுகளை பரிகசிக்கும் வகையில், அப்பகுதியில் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநரின் உதவியுடன், புத்தர் சிலையொன்று வைக்கப்பட்டிருக்கின்றது. அதே வேளை, மேய்ச்சல் தரை விவகாரத்தில் ரணிலின் உத்தரவுகள் ஒரு பொருட்டாகவும் எடுத்துக் கொள்ளப்பட
வில்லையென்றும் கூறப்படுகின்றது. இந்த அடிப்படையில் நோக்கினால், தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிடுவது போன்று, ஜனாதிபதி ரணிலின் உத்தரவுகள் எதுவுமே
கிழக்கில் பொருட்படுத்தப்படுவதில்லை போன்றதொரு சூழலே தெரிகின்றது.
ஒரு வேளை நாடாளுமன்றத்தில் ரணிலுக்கான ஆதரவின்மையால்தான் இவ்வாறு நடக்கின்றதா? இதற்கு ஆமென்னும் பதில் கிடைக்குமாயின், ஒரு வேளை ரணில் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றாலும் கூட, நாடாளுமன்றத்தில் பலமில்லாது போனால், அவரால் எதனையும் செய்ய முடியாதல்லவா! நிலைமைகளை அவதானிக்கும் போது, ரணில் குறிப்பிட்டவாறுஎந்தவொரு விடயமும் நடைபெறவில்லை. ஆனால் தன்னால்தான் நாடு மீண்டுவருவதான ஒரு கதையை சொல்லிவருகின்றார்.
பொருளாதார நிலைமை ஓரளவு மீட்சிபெற்றமைக்கு, ரணில் ஒரு காரணம்தான். ஆனால் ரணிலின் உத்தரவுகள் எவையுமே நடை முறைக்கு வரவில்லையென்பது தமிழ் மக்களை பொறுத்தவரையில் சிக்கலானது. வெறும் நம்பிக்கைகளில் தனிப்பட்டவர்களுடனான உறவினடிப்படையில் தமிழ் கட்சிகள் செயல்பட முடியாதென்பதையே இந்த நிலைமை எடுத்துரைக்கின்றது.