யாழ்ப்பாணத்தில் உள்ள பலரும் பெருமளவு பணத்தை கொடுத்து முகவர்கள் ஊடாக வெளிநாடு செல்ல முயன்று இடைத்தங்கல் நாடுகளில் சிக்கி தவிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
பிரான்ஸ்க்கு செல்வதற்காக இருபது இலட்சம் ரூபாய் பணத்தை வெளிநாடொன்றில் உள்ள போலி முகவரிடம் கையளித்து ஏமாந்து போன யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூதாட்டி தற்போது லெபனான் சிறையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிலநாட்களுக்கு முன்னர் கொழும்புத்துறை வசந்தபுரம் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் போலி முகவரை நம்பி ஏமாந்துபோய் லெபனான் நாட்டின் சிறையில் சிக்கியுள்ளதாக செய்தி வெளியாகி இருந்தது.
இந்நிலையில் வேலணை மேற்கு 8 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை சரஸ்வதி என்கிற 64 வயதான மூதாட்டி லெபனான் சிறையில் உள்ளதாக அவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவரது குடும்பத்தினர், பிரான்ஸ் நாட்டுக்கு செல்வதற்கு முகவர் ஒருவரை நம்பி விமானம் மூலம் வெவ்வேறு நாடுகளுக்கு சென்று லெபனான் ஊடாக பிரான்ஸ் செல்வதற்காக இருந்த போது உரிய ஆவணங்கள் இல்லை என்பதற்காக கைது செய்யப்பட்டு லெபனான் சிறையில் வைக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சினால் அறிவிக்கப்பட்டது.
கடந்த ஜுன் மாதம் இலங்கையில் இருந்து புறப்பட்டார். ஐந்து மாதங்கள் ஆகியுள்ள நிலையில் லெபனான் நாட்டின் சிறையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
லெபனான் அருகில் உள்ள இஸ்ரேல் நாட்டில் யுத்தம் இடம்பெறுவதால் எமக்கு பயமாக உள்ளது. எமது அம்மா சுகவீனம் அடைந்துள்ளார்.எமது அம்மாவை நாட்டுக்கு கொண்டுவர உரிய தரப்புக்கள் உதவ வேண்டும் என கருத்து தெரிவித்தனர்.