இலங்கையில் விலையேற்றம் என்பது தவிர்க்க முடியாமல் தான் இருக்கிறது என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவிற்கு நேற்று முன்தினம் (24) விஜயம் மேற்கொண்ட கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளுகின்ற பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இன்று நாடு இருக்கின்ற நிலையிலும் உலகத்தினுடைய போக்குகள், யுத்தங்கள் சூழ்ந்திருக்கின்ற சூழலில் விலையேற்றம் என்பது தவிர்க்க முடியாமல் தான் இருக்கிறது. இது அனைவரையும் பாதிக்கிறது. ஆகையால் அதிலிருந்து நாங்கள் மீள வேண்டும்.
அதற்காக தான் இயற்கை மின்சார உற்பத்திக்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றோம். காற்றாடி, சூரிய ஒளி போன்ற மாற்று சக்தியை மின்சாரமாக மாற்ற தேவையான நடவடிக்கைகளை விரைவாக செய்து முடிப்போமாக இருந்தால் அதிகரித்த மின்சார கட்டண பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாத்து கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.