ஒழுக்க சீலர்கள் மட்டும்தான் இந்த புனிதர்களை வழிநடத்தும் செயற்பாடுகளில் ஈடுபடமுடியும் எனவும் தமிழ் தேசியம் பேசி குற்றங்களில் ஈடுபட்டவர்கள் இவற்றில் உள்நுழைய முடியாது எனவும் தரவை மாவீரர் துயிலும் இல்ல ஏற்பாட்டு குழு உறுப்பினர் நிதர்சன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இதனை தெரிவி்த்துள்ளார். இதன்போது கருத்து தெரிவித்த அவர்,
தரவை மாவீரர் துயிலுமில்லத்தின் ஏற்பாட்டு குழுவாகிய நாங்கள் எமது மாவீரர்களின் புனித பூமியை துப்பரவு செய்ய அனைவரையும் அழைக்கின்றோம்.
ஒத்துழைப்பினை வழங்கி எமது அந்த புனிதர்களின் புனித பூமியை துப்பரவு செய்து இம்முறை அவர்களின் நினைவாக விளக்கேற்றி மிகவும் சிறப்பான முறையில் நடத்துவதற்கு அனைவரினதும் ஒத்துழைப்பை எதிர்பார்க்கின்றோம்.
இந்த துயிலும் இல்லத்துக்கு என்று எமது செயற்பாட்டு குழுவை தவிர, குழப்பங்களை ஏற்படுத்துவதற்கும் பாரிய குற்றங்களை செய்த சிலர் வந்து தேசியம் என்கின்ற செயற்பாட்டில் ஈடுப்படவும் முடியாது.
ஒழுக்க சீலர்கள் மட்டும்தான் இந்த புனிதர்களை வழிநடத்தும் செயற்பாடுகளில் ஈடு பட முடியும்.
மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டத்திற்கு அந்தந்த இடங்களில் ஒவ்வொரு குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அந்தந்த குழுக்கள் அந்தந்த இடங்களில் மாவீரர்களின் நினைவேந்தலினை செய்வார்கள்.
நாங்கள் தரவை மாவீரர் துயிலும் இல்லத்தின் ஏற்பாட்டு குழு. பெரியதொரு பிரதேசத்தில் அதுவும் ஒரு காட்டுப் பகுதியில் இந்த தரவை துயிலும் இல்லம் இருப்பதினால் முன்கூட்டியே இந்த அறிவித்தலை எமது மக்களுக்கு விடுப்பதற்காகவே இந்த ஊடக முன்னால் நாம் வந்துள்ளோம்.
இந்த அரசாங்கம் எங்களது துயிலும் இல்லங்களில் பாரிய இராணுவ முகாம்களை அமைத்திருக்கின்றது.
எமது துயிலும் இல்லத்திலும் கூட ஒரு சில ஆக்கிரமிப்பாளர்கள் வந்து சில குளறுபடிகளை செய்து கொண்டிருக்கின்றனர்.
ஆனால் நாங்கள் இந்த தடவை துயிலும் இல்லங்களை சிறப்பான முறையில் ஒரு குழுவாக அதனை துப்பரவு செய்து தொடர்ச்சியான முறையில் அதனை பராமரிப்பதற்கான ஏற்பாடுகளை செய்வோம்” என்றார்.