உள்ளூராட்சிச் சபைகளின் நீடிக்கப்பட்ட பதவிக்காலம் நிறைவு பெற்று சபைகள் கலைந்ததையடுத்து, தற்போது பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளின் கீழ் சபைகளின் நிர்வாகம் கொண்டு வரப்பட்டுள்ளது. குறிப்பாக உள்ளூராட்சிச் சபைகளின் ஆணையாளர்கள், மற்றும் செயலாளர்களின் நிர்வாகப் பொறுப்பில் சபைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதன்படி அம்பாறை மாவட்டத்திலும், கிழக்கிலும் முதன்மை நிலையிலுள்ள உள்ளூராட்சி சபையான நிந்தவூர் பிரதேச சபைக்கு, சபையின் செயலாளராகக் கடமையாற்றிவரும் திருமதி.ரி.பரமேஸ்வரன் பொறுப்பு வாய்ந்த நிறைவேற்று அதிகாரியாக தெரிவு செய்யப்பட்டு தமது கடமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளார்.
முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளார் பிறந்த மண்ணானகாரை தீவைச் சேர்ந்த திருமதி.ரி.பரமேஸ்வரன் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் நிந்தவூர் பிரதேச சபையின் செயலாளராக கடமையேற்றதுடன், நிந்தவூர்ப் பிரதேச மக்களின் நல்லபிமானத்தையும், வரவேற்பையும் பெற்ற ஒருவராகத் திகழ்வதுடன், சபை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் மட்டுமன்றி, ஏற்கனவே சபையிலிருந்த மக்கள் பிரதிநிதிகளான உறுப்பினர்களின் நல்லபிமானத்தை வென்ற ஒருவராகவும் திகழ்ந்து வருகின்றார்.