இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக்க ரத்நாயக்கவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தமக்கு தொலைபேசி ஊடாக கொலைமிரட்டல் விடுத்தாக ஜனக்க ரத்நாயக்க செய்த முறைப்பாட்டிற்கு அமைய குறித்த சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
தமக்கு தொலைபேசி ஊடாக அழைத்து 15 இலட்சம் ரூபா கப்பம் வழங்குமாறு கோரி , மிரட்டல் விடுக்கப்பட்டதாக ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் செய்த முறைப்பாட்டிற்கு அமைய காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.
இந்த விசாரணைகளை அடுத்து மூன்று சந்தேக நபர்கள் ரம்புக்கனை பிரதேசத்தில் வைத்து கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் 24, 26 மற்றும் 31 வயதுடைய ரம்புக்கனை மற்றும் குருநாகல் பகுதியைச் சேர்ந்தவர்கள் என காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் நவம்பர் (9 )ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.