பிரதேச மக்களையும், மக்கள் பிரதிநிதிகளையும் புறந்தள்ளி மக்களின் பிரச்சினைகளை கணக்கில் எடுக்காது நடைபெற்ற மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் தொடர்பில் கேள்வியெழுப்பிய ஊடகவியலாளர்களை இராஜாங்க அமைச்சர் பிள்ளையான அச்சுறுத்தும் வகையில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதுமட்டுமன்றி உடகவியலாளர்கள் பணத்தினைப்பெற்றுக்கொண்டு, மக்களுக்கு பொய்யான தகவல்களை வழங்குவதாகவும், சிறிய விடயங்களையும் ஊடகங்கள் மூலம் பெரிதாக காண்பிப்பதாகவும் தெரிவித்து ஊடகவியலாளர்களுக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களையும் வெளியிட்டுள்ளார்.
அத்துடன் குறிப்பிட்ட ஒரு ஊடகவியலாளரை சுட்டிக்காட்டி, மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனிடம் பணம் வாங்கியே தவறான செய்திகளை ஊடகங்களுக்கு பரப்பிவருவதாக பகிரங்கமாகவே குற்றம் சாட்டியுள்ளார்.
இதன் போது குறுக்கிட்ட சாணக்கியன், ஊடகவியலாளர்களுக்கு பணம்கொடுத்து பொய்யான செய்திகளைபரப்புவதாகத் தெரிவித்தமையை தான் வன்மையாக கண்டிப்பதாகவும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
இன்று காலை ஆரம்பிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் தங்களது பிரச்சினைகளை முன்வைப்பதற்காக சென்ற பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளை புறந்தள்ளி, குறிப்பாக இராஜாங்க அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர்களை வெளியில் நிற்க வைத்து பிரதான கதவை பூட்டி விட்டு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரான பிள்ளையானும், மாவட்ட அரசாங்க அதிபரும் இணைந்து சர்வாதிகாரப் போக்குடன் அபிவிருத்தி குழு கூட்டத்தை நடத்தியுள்ளனர்.
இதனையடுத்து முறைப்பாடு வழங்க வந்த மக்களை வெளியிலேயே நிற்க வைத்து விட்டு, நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனும், இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனும் கூட்டம் இடம்பெறும் மண்டபத்திற்குள் சென்று இது தொடர்பில் பிள்ளையானுடன் வாக்குவதாம் இடம்பெற்றுள்ளது.
அதனையடுத்தே செய்தி சேகரிப்பதற்காக சென்ற ஊடகவியலாளர்களை நோக்கி பிள்ளையான் அவதூறான வார்த்தைகளால் பேசியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.