இலங்கை மெதடிஸ்த திருச்சபை வாழைச்சேனை சேகரம், ஹனியல் சிறுவர் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மாணவர்கள்,இளைஞர், யுவதிகளின் எதிர்கால கல்வி மற்றும் வாழ்வதாரத்தை மேம்படுத்தும் முகமான பல்வேறுபட்ட அபிவிருத்தி திட்டங்கள் வாழைச்சேனை திருச்சபை வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
இதன் முதன் நிகழ்வாக வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கும் முகமாக பாடசாலைகளுக்கு சென்று கல்வியை கற்பதற்காக துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டன.
பிரதேசத்தில் கல்வி கற்றுவிட்டு தொழிவாய்ப்பின்றி இருக்கும் யுவதிகளின் நலன் கருதி ‘எம்.சி.தையலகம்’ வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. அத்துடன் பாரம்பரிய உணவினை நாடுவோரின் நன்மை கருதி சிறுவர் திட்ட ‘தெபோரா ‘ பாரம்பரிய உணவகத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வும் நடைபெற்றது.
இலங்கை மெதடிஸ்த திருச்சபை வாழைச்சேனை சேகரத்தின் முகாமைக் குரு அருட்கலாநிதி கே.எஸ்.நிசாந்தன் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை மெதடிஸ்த திருச்சபை திருப்பேரவை தலைவர் எபநேசர் ஜோசப் மற்றும் சிறப்பு அதிதிகளாக திட்ட ஊக்குவிப்பாளர் விலி செயான்,கிராமசேவகர் கா.ஜெகதீஸ்வரன்,அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர் வி.திரேசா, நூலகர் பொறுப்பாளர் அருமைநாயகம் மற்றும் கிராம அபிவிருத்தி சங்க பொருளாலர் தே.தேவகுமார் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
இதன்போது அதிதிகள் மலர் மாலை அணிவிக்கப்பட்டு மாணவர்களின் கோலாட்டத்துடன் வரவேற்கப்பட்டனர்.பின்னர் தமிழ்பண்பாட்டுடன் பால் பொங்கி மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் யாவும் ஆரம்பித்து வைக்கப்பட்டன.