பிளாஸ்டிக்கை “சாப்பிடும்” ஒரு பக்டீரியாவை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த பக்டீரியாவை பயன்படுத்தி உலகம் முழுவதும் பிளாஸ்டிக்கை மீள்சுழற்சி செய்யும் முயற்சிகளில் ஈடுபடவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஒவ்வொரு வருடமும் 380 மில்லியன் தொன்களுக்கும் அதிகமாக பிளாஸ்டிக் உற்பத்தி செய்யப்படுகிறது, இதில் பாதிக்கும் அதிகமானவை ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
பிளாஸ்டிக்கை மீள்சுழற்சி செய்ய முயற்சிகள் பரவலாக முன்னெடுக்கப்பட்டு வந்தாலும், அனைத்து பிளாஸ்டிக்கிலும் 5வீதத்திற்கும் குறைவானவையே மீள்சுழற்சி செய்யப்படுகின்றன, மீதமுள்ளவை பெரும்பாலும் நிலப்பரப்புகளில் வீசப்படுகின்றன.
மண் மற்றும் கழிவுநீர் கசடுகளில் காணப்படும் கொமமோனாஸ் டெஸ்டோஸ்டிரோனி என்ற பொதுவான (Comamonas testosteroni) பக்டீரியம் பிளாஸ்டிக்கை நுகரும் திறன் கொண்டதாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
சலவை சவர்க்காரம், பிளாஸ்டிக் மற்றும் தாவரங்களில் உள்ள சேர்மங்களை உடைக்கும் பக்டீரியத்தின் திறனை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
“இந்த உலகத்தில் குவிந்து கிடக்கும் கழிவுகளை மீள்சுழற்சி செய்ய உதவும் வகையில், இந்த பாக்டீரியத்தினை பயன்படுத்தவுள்ளதாக” வடமேற்கு சுற்றுச்சூழல் பொறியியல் பேராசிரியர் லுட்மில்லா அரிஸ்டில்ட் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இந்த பக்டீரியம் இயற்கையாகவே பிளாஸ்டிக்கை உடைக்கும் திறனைக் கொண்டிருப்பதால், பெரிய அளவிலான பிளாஸ்டிக் மறுசுழற்சி நடவடிக்கைகளில் இந்த பக்டீரியத்தினை பயன்படுத்த முடியும் என்றும் ஆராய்ச்சி குழு கூறுகிறது.
மீள்சுழற்சிக்கு இந்த பக்டீரியாக்கள் இன்னும் உத்தியோகபூர்வமாக பயன்பாட்டில் கொண்டுவரவில்லை என்றாலும், அது விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் கூறப்படுகிறது.
அதேசமயம் 2019 ஆம் ஆண்டு ஜப்பான்,அமெரிக்கா,பிரிட்டன் ஆகிய நாடுகள் இணைந்து “இதேவனெல்லா சகையான்சிஸ்” என்ற பிளாஸ்டிக்கை உண்ணக்கூடிய பாக்டீரியாவை கண்டுபிடித்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.