தம்மை பௌத்தர்கள் என்று கூறிக்கொண்டு பௌத்த தர்மத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களை திருத்த உலகில் உள்ள பௌத்தர்கள் முன்வர வேண்டும். இவர்கள் திருந்தாவிட்டால் இந்த நாடு உருப்படாது என்று இந்து சமயப் பேரவையின் தலைவர் ஈசான சிவ சக்திகிரீவன் தெரிவித்துள்ளார்.
நேற்று வியாழக்கிழமை செய்தியாளர்களை சந்தித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.உலகுக்கு மகோன்னதமான தர்மங்களை போதித்த புத்த பகவானின் புனித நாமங்களை உச்சரித்துக் கொண்டு அவரது போதனைகளை சற்றேனும் மதியாமல், ஏனைய மதத்தவரின் வழிபாட்டிடங்களையும், வழிபாட்டுச் சின்னங்களையும் துவம்சம் செய்கின்றனர்.
அத்தோடு, தேவையற்ற விடயங்களுக்குள் தலையை நுழைத்து பல பௌத்த துறவிகள் ஆர்ப்பாட்டங்கள், அடாவடித்தனங்கள், வன்முறைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் தமது தர்மங்களை மறந்து, புத்த பகவானின் பெயரில் புதிய மதத்தையே ஸ்தாபித்து, அந்த மகானுக்கு களங்கத்தை ஏற்படுத்த முற்படுகிறார்கள்.
இவர்கள் இங்கு இந்துக்களின் வழிபாட்டிடங்களை தகர்த்து விட்டு, புத்த பகவானுக்கு சிலை
எழுப்புவதையே தொழிலாக கொண்டுள்ளார்கள். புத்த பகவான் சிலை வழிபாட்டையே விரும்பவில்லை
என்ற அடிப்படை அறிவே அற்றவர்களாக காணப்படுகிறார்கள். இவர்களுக்கு உலகில் உள்ள பௌத்தர்கள், பௌத்த தர்மத்தை போதிக்க முன்வருவதே அவசியம் – என்றார்.