தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான இரா. சாணக்கியன் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் மத்தியில் இனவாதத்தை தூண்ட தொடர்ந்தும் முயற்சிப்பதாக மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பில் சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்றத்துக்குள்ளும் அதன் வெளியிலும் பேசாது அமைதி காப்பதாக நேற்று (03) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் தெரிவித்துள்ளார்.
அத்து்டன், தமிழர்களுக்கு எதிராக தாம் வெளியிட்டதாக கூறப்படும் கருத்துக்கள் தொடர்பில் வருந்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.
தமது தாயின் சமாதி உடைக்கப்பட்டதை அறிந்து சில வார்த்தைகள் பிரயோகிக்கப்பட்டிருந்தாலும், அவற்றை தாம் மனதார கூறவில்லை என அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு ஜயந்திபுர மற்றும் விஜயபுரவில் மக்களுக்காக ஒதுக்கப்பட்ட மயானத்தை கனரக இயந்திரம் கொண்டு சுத்தப்படுத்தியமை தொடர்பில் கடந்த 21 ஆம் மற்றும் 24 ஆம் திகதிகளில் தாம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை மேற்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், இந்த முறைப்பாடு தொடர்பில் பொலிஸார் அக்கறை கொள்ளவில்லை எனவும் விசாரணைகளை முன்னெடுக்கவில்லை எனவும் அம்பிட்டிய சுமனரத்ன தேரர் குற்றம் சாட்டியுள்ளார்.
பொலிஸாரின் அலட்சியம் காரணமாக தாம் குறித்த மயானம் உள்ள இடத்துக்கு சென்றிருந்ததாகவும், இதன் போது மயானத்தில் இருந்த தனது தாயின் சமாதியை அழிக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக ஆக்ரோஷமடைந்திருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
இதன் போது, கடமை தவறிய பொலிஸாரை தாம் தூற்றியதாக அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தெரிவித்துள்ளார். மேலும், கிழக்கில் வாழும் கிறிஸ்தவ, முஸ்லீம் மற்றும் இந்து மக்களுக்கான மயானங்கள் அழிக்கப்படவில்லை என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில், தாம் தமிழ் மக்களுக்கு எச்சரித்ததாக பலர் கூறுவதாகவும், தாம் அவ்வாறான எந்தவொரு நடவடிக்கையையும் முன்னெடுக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், சிங்கள மக்களின் மயானங்கள் அழிக்கப்படுகின்றமை தொடர்பில் யாரும் அக்கறை கொள்வதாக தெரியவில்லை எனவும் அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.