அடுத்த வருடத்திற்கான பாடசாலைப் பயிற்சிப் புத்தகங்களை 30 வீத சலுகை விலையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான தகவல்களை வழங்குவதற்காக பாடசாலைகளுக்கு சுற்று நிருபம் வெளியிடப்படும் என கொழும்பு தர்ஸ்டன் கல்லூரியில் இடம்பெற்ற பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் சுசில் பிரேமஜயந்த வலியுறுத்தினார்.
அடுத்த வருடத்திற்குள் பாடசாலைகளில் ஆறாம் தரத்திற்கு மேல் டிஜிட்டல் மயமாக்கும் வேலைத்திட்டம் தொடர்பிலும் கல்வி அமைச்சர் கருத்து வெளியிட்டார்.
இதேவேளை, இலங்கை அதிபர் சேவையின் மூன்றாம் தர வெற்றிடங்களை நிரப்புவதற்கு புதிய நியமனங்களை வழங்குவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை நிராகரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
குறித்த மனு தொடர்பில் பிரதிவாதிகள் முன்வைத்த பூர்வாங்க ஆட்சேபனைகளை பரிசீலித்த சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற குழாம் இந்த தீர்மானத்தை வழங்கியதாக எமது நீதிமன்ற செய்தியாளர் குறிப்பிட்டார்.