வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுகின்ற செயற்பாடுகளுக்கு எதிராக போராட்டங்கள் முன்னெடுக்கப்படுமென தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதிராசா தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மட்டக்களப்பு மயிலத்தமடுவில் தமிழ்ப் பண்ணையாளர்களின் மேய்ச்சல் தரையில் சிங்களக் குடியேற்றம் ஏற்படுத்தப்படுகின்றது.
இதுபோலவே வடக்கு, கிழக்கில் சிங்கள பௌத்த மயமாக்கல் செயற்பாடுகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த 70 வருடங்களாகத் தமிழ் மக்கள் இனத்தின் விடுதலைக்காக மட்டுமல்ல, தங்கள் தாயக நிலம் பௌத்த,சிங்கள மயமாக்கலுக்கு எதிராகவும் போராடி வந்திருக்கின்றனர்.
எனவே, எமது நிலத்தை விடுவிப்பதற்கும் அதனை ஆக்கிரமிப்பதற்கு எதிராகவும் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம்.
எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள எமது கட்சியின் மாநாட்டிலும் நாங்கள் இன விடுதலைக்காகவும், நில விடுதலைக்காகவும் ஜனநாயக வழியிலான போராட்டங்களை முன்னெடுப்பதற்கான திட்டங்கள் தொடர்பாக ஆராய்ந்து, அதன் பின்னர் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுப்பதற்குத் தீர்மானித்துள்ளோம் எனவும் தெரிவித்தார்.