பாராளுமன்ற வளாகத்தில் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே மற்றும் பல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட குழு இன்று (06) கூடவுள்ளது.
அண்மையில் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ரோஹன பண்டார மற்றும் சுஜித் சஞ்சய் பெரேரா ஆகியோருக்கிடையில் பாராளுமன்ற வளாகத்தில் மோதல் ஏற்பட்டதையடுத்து சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் இது தொடர்பில் ஆராய குழுவொன்று நியமிக்கப்பட்டது.
பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஸ தலைமையில் இந்தக் குழு நியமிக்கப்பட்டதுடன், சம்பவம் தொடர்பான நாடாளுமன்றத்தின் சிசிடிவி காட்சிகளையும் குழு அண்மையில் அவதானித்துள்ளது.
இதன்படி, இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய தரப்பினர் இன்று இந்தக் குழு முன்னிலையில் அழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் இருந்து விவகாரங்கள் விசாரிக்கப்பட்டு, அதன் முடிவு சபாநாயகருக்கு அறிவிக்கப்பட உள்ளது.
இந்தக் குழுவுக்கு இரு பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவதற்கு இதுவரை தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இன்று இடம்பெறவுள்ள இந்தக் குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர்களான கலாநிதி சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே மற்றும் திருமதி தலதா அத்துகோரள ஆகியோர் இணைந்து கொள்ளவுள்ளனர்.
இதேவேளை, இந்தக் குழுவினால் நடத்தப்படும் விசாரணைகளில் ஏதேனும் ஒரு தரப்பினர் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால், அவர்கள் மூன்று மாத காலத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்க நேரிடும்.