மற்றுமொரு சீன ஆய்வு கப்பல் இலங்கைக்குள் பிரவேசிப்பதற்கு அனுமதி கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 2024 ஆம் ஆண்டு முதல் பகுதியில் குறித்த கப்பல் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
இருப்பினும் குறித்த கப்பலுக்கு இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, குறித்த சீன ஆய்வு கப்பல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்கு அனுமதி கோரப்பட்டுள்ளதாகவும், இதற்கு இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை எனவும் இலங்கை அரசாங்கத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இருப்பினும், இந்த விடயம் தொடர்பில் கொழும்பில் உள்ள சீன தூதரகம் எந்தவொரு அறிவிப்பையும் விடுக்கவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவினால் தொடர்ந்தும் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டு வரும் நிலையில், சீனா மீண்டும் அனுமதி கோரியுள்ளது. இந்த நிலையில், சீனாவின் கோரிக்கை குறித்து தமக்கு தெரியாது என வெளி விவாகர அமைச்சின் ஊடகப் பேச்சாளர் கபில பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கடந்த 14 மாதங்களில் இரண்டு ஆய்வு கப்பல்களை சீனா இலங்கைக்கு அனுப்பியுள்ளது. இதன்படி, கொழும்பு துறை முகத்தில் அண்மையில் நங்கூரமிட்ட ‘ஷி யான் 6’ எனும் சீன ஆய்வு கப்பல் இலங்கை கடற்பரப்பில் இரண்டு நாள் ஆய்வு நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தது.
நாரா எனப்படும் தேசிய நீரியல் வளங்கள் மற்றும் ஆராய்ச்சி முகவர் நிறுவனத்துடன் இணைந்து இந்த ஆய்வு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. கடல் நீரின் உப்புத்தன்மை மற்றும் வெப்பநிலை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டுக்குப் பின்னர் குறித்த ஆய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் முதலாவது சந்தர்ப்பமாக இது கருதப்படுகின்றது.
இந்த நடவடிக்கையானது இந்திய பெருங்கடலில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வருவது குறித்த இந்தியாவின் கவலையை மேலும் அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.