மனிதன் வாழ தண்ணீர் மிகமுக்கியமானது. பிரபஞ்சத்தில் இருக்கும் கோள்களில் மனிதர்கள் வாழ ஏதுவான கிரகமாக பூமி மட்டுமே கருதப்படுகிறது. இதற்கு ஒரு முக்கிய காரணம் இங்கு மட்டுமே நீர்வளம் உள்ளது. பூமியில் இன்னும் எவ்வளவு நீர்வளம் மிஞ்சியுள்ளதென்ற தகவலை நாசா தற்போது வெளியிட்டுள்ளது.
பூமியின் நிலத்தடி நீர் குறைந்து வருவதால் விஞ்ஞானிகள் பூமியைப்போன்ற அம்சங்கள் கொண்ட கிரகம் உள்ளதா, வேறு எதும் கோள்களில் நீர் இருப்பதற்கான ஆதரங்கள் கிடைக்குமா என்று பல ஆண்டுகளாக தீவிரமான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மற்ற கிரகங்களில் தண்ணீர் உள்ளதா என்பதை ஆராய்வது போலவே பூமியில் எவ்வளவு தண்ணீர் மீதம் உள்ளது என்றும் அவ்வபோது கண்காணித்து வருகிறது நாசா.
நாசாவின் இந்த கண்காணிப்பு மூலம், நிலைமை கைமீறுவதற்கு முன்னரே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க முடியும். இதன் அடிப்படையில், பூமியின் நிலத்தடி நீரின் அளவை கண்காணிக்க செயற்கை கோள் ஒன்றை முண்ணனி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, ஃப்ரென்ச் ஸ்பேஸ் ஏஜென்சியுடன் (French Space Agency (CNES)) சேர்ந்து விண்வெளியில் நிறுவியுள்ளது.
பூமியில் தண்ணீர் எவ்வளவு உள்ளது என்பதை தெரிந்துகொள்ள உங்களுக்கும் ஆர்வமாக உள்ளதா? அதற்கு முன் இந்த செயற்கைகோளை பற்றி தெரிந்துகொள்ளலாம் வாங்க. சர்ஃபேஸ் வாட்டர் அன்ட் ஓஷன் டோப்போக்ராஃபி (Surface Water and Ocean Topography) என்று கூறப்படும் இந்த SWOT செயற்கை கோள் டிசம்பர் 16, 2022-ல் ஸ்பேஸ் எக்ஸ் ஃபால்கன் 9 ராக்கெட் (SpaceX Falcon 9 rocket) மூலம் விண்ணில் ஏவப்பட்டது. இது அமெரிக்காவின் காலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள வான்டர்பெர்க் ஸ்பேஸ் ஃபோர்ஸ் பேஸின் (Vandenberg Space Force Base) ஸ்பேஸ் லான்ச் காம்ப்லெக்ஸ்-4Eயில் (Space Launch Complex-4E) இருந்து விண்ணில் ஏவப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. SWOT-ல் இருக்கும் Ka-பேண்ட் ரேடார் இன்டர்ஃபெரோமீட்டரில் (Ka-band Radar Interferometer) 33 அடி தூரம் இடைவெளியில் பிரித்து வைக்கப்பட்ட இரண்டு ஆன்டெனாக்கள் இருக்கும்.
இந்த ஆன்டெனாக்கள் அனுப்பும் ரேடார் பல்ஸ்கள் (Radar Pulse) தண்ணீரின் பரப்பில் பட்டு திருப்பி அனுப்பப்படும். அந்த ரேடார் பல்ஸ்களை கொண்டு பூமியின் நீர்ப்பரப்புகளான கடல், சமுத்திரம், ஏரி, குளம், ஆறு ஆகியவற்றில் இருக்கும் தண்ணீரின் அளவு, ஆழம் மற்றும் நிலப்பரப்பின் உயரம் போன்ற முழு தகவலையும் இந்த செயற்கைகோள் கண்டறிந்து சேகரிக்கும். இந்த SWOT செயற்கை கோளானது சுமார் 857 கிலோமீட்டர் சுற்றுவட்டப் பாதையில் பூமியை சுற்றி, 21 நாட்களுக்கு ஒரு முறை பூமியின் தண்ணீர் பரப்பின் அளவில் ஏற்படும் மாற்றத்தை பதிவு செய்து, ஆராய்ச்சி கூடத்திற்கு அனுப்பும். அந்த வகையில் கடந்த ஜூலை 26 முதல் ஆகஸ்டு 16 வரையிலான டேட்டாக்களை SWOT அனுப்பிய நிலையில் விஞ்ஞானிகள் அதனை ஆராய்ந்து மேப் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
SWOT அனுப்பிய டேட்டாக்களின் மூலம் பூமியின் சில நீர்பரப்புகளில் தண்ணீரின் உயரம் அதிகரித்துள்ளதாகவும் (சிவப்பு மற்றும் ஆரஞ்சு குறிப்புகள்) சில இடங்களில் உயரம் குறைந்துள்ளதாகவும் (நீல நிறக் குறிப்புகள்) கண்டறியப்பட்டுள்ளது. நீர்பரப்புகளின் உயரத்தில் ஏற்படும் மாற்றத்தை அந்த பகுதியின் வெப்பநிலையுடன் ஒப்பிட்டு குறிப்பிடலாம் என்று நாசா விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
உதாரணமாக, சூடாக இருக்கும் தண்ணீர் விரிந்து கொடுக்கும் தன்மையை கொண்டிருக்கும். எனவே இந்த 21 நாட்களில் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ள பகுதிகளில் வெப்பநிலை அதிகரித்திருக்கலாம் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர். SWOT வெளியிடும் டேட்டாக்கள் மூலம் காலநிலை மாற்றங்கள் கண்டறிய முடியும் என்பதால் பூமி வெப்பமயமாதலை சுதாரித்துக்கொண்டு மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க முடியும். இது பூமியின் நீர்வளத்தை கண்காணிக்க உதவுவதோடு, நீர்வளத்தை எப்படி எதிர்கால தேவைக்கு நாம் பாதுகாக்க வேண்டும் என்ற கணக்கையும் இது வழங்கும் என்று தென் கரிஃபோர்னியாவில் உள்ள நாசாவின் ஜெட் ப்ரொபல்ஷன் ஆராய்ச்சி கூடத்தின் (NASA’s Jet Propulsion Laboratory) SWOT ப்ராஜெக்ட் மேனேஜர் (project manager) பராக் வேஸ் (Parag Vaze) தெரிவித்துள்ளார்.