இலங்கையில் பணியாற்றும் தமிழ் ஊடகவியலாளர்கள் அரச அடக்குமுறையில் இருந்து விடுபட்டும் அச்சமின்றியும் செயலாற்ற அனுமதிக்கப்பட வேண்டும் என, அமெரிக்காவில் செயற்படும் ஊடகவியலாளர்களுக்கான பாதுகாப்பு அமைப்பு (சி.பி.ஜே) அரசிடம் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து குறித்த அமைப்பின் ஆசிய நிகழ்ச்சித் திட்டங்களுக்கான ஒருங்கிணைப்பாளர் பெஹ் லி யீ கருத்துத் தெரிவிக்கையில்-இலங்கை அதிகாரிகள் உடனடியாக தமிழ் ஊடகவியலாளர்களான சசிகரன் புண்ணியமூர்த்தி மற்றும் பாலசிங்கம் கிருஷ்ணகுமார் ஆகியோர் மீதான அனைத்து அடக்குமுறைகளையும் கைவிட்டு, அவர்கள் சுதந்திரமாக செய்தி சேகரிப்பில் ஈடுபடுவதை உறுதி செய்யவேண்டும்.
அத்துடன் மனித உரிமைகள் விடயங்கள் தொடர்பிலும் அது மீறப்படும் போது தமது சமூகத்தின் மீது ஏற்படுத்தும் தாக்கம் தொடர்பிலும் செய்திகளை சேகரித்து வெளியிட்டு வரும் தமிழ் செய்தியாளர்களை இலக்கு வைத்து தொடர்ச்சியாக துன்புறுத்தும் அரசின் நீண்டகால நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக் கப்பட வேண்டும்-என்றார்.