தோட்டத்துறை மக்கள் இந்த நாட்டில் இரண்டாம் தர பிரஜைகள் அல்ல. அதனால் வரவு செலவு திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு அதிகரிக்கப்பட்டிருக்கும் 10 ஆயிரம் ரூபா வாழ்க்கைச்செலவு கொடுப்பனவு தோட்டத் தொழிலாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.
அத்துடன் மலையகத்தில் வீடுகளை நிர்மாணிக்க தனி செயலணி அமைத்து செயற்பட நடவடிக்கை எடுக்கவேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
வரவு செலவு திட்டத்தின் மூலம் அதிகரிக்கப்பட்டிருக்கும் வரிகளை வருமானம் குறைந்த பெருந்தோட்ட மக்கள் எவ்வாறு சமாளிக்கப்போகிறது என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.
பெருந்தோட்ட மக்களின் நாளாந்த வருமானம் ஆயிரும் ரூபாவாகும். இதன் பிரகாரம் ஒரு தொழிலாளி மாதத்துக்கு 20ஆயிரம் ரூபாவே பெறமுடியுமாக இருக்கிறது.
பெருந்தோத்துறையில் 4பேர் கொண்ட குடும்பத்துக்கு மாதச்செலவுக்கு 83ஆயிரத்தி 333ரூபா தேவை என்பதை வல்லுனர்களால் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.
ஆனால் கடந்த 3வருடங்களாக தோட்டத் தொழிலாளர்களுக்கான நாளாந்த வேதனம் அதிகரிக்கப்படவில்லை. ஆனால் வாழ்க்கைச்செலவு 3மடங்கு அதிகரிக்கப்பட்டிருக்கிறது.
அத்துடன் தோட்டத்தொழிலாளர்களில் 70 வீதமானவர்கள் வறுமைக்கோட்டுக்குள் உள்வாங்கப்பட்டிருக்கின்றனர்.
அதனால் வரவு செலவு திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு அதிகரிக்கப்பட்டிருக்கும் 10ஆயிரம் ரூபா வாழ்க்கைச்செலவு தோட்டத்தொழிலாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்றார்.