எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை இலக்குவைத்து பாரிய கூட்டணியொன்றை உருவாக்கும் முயற்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா ஈடுபட்டு வருகிறார். புதிய கூட்டணிக்கான அலுவலகம்கூட அண்மையில் இராஜகிரியவில் திறக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
புதிய கூட்டணியில் இணைந்துள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்வரும் தேர்தலில் ஒன்றிணைந்து பாரிய அரசியல் சக்தியாக உருவெடுக்க வேண்டுமென்ற தொனியிலேயே லான்சாவின் நகர்வுகள் உள்ளன.
பொதுஜன பெரமுன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி உட்பட பல்வேறு கட்சிகளுடன் லான்சா தலைமையிலான குழு பரந்தப்பட்ட பேச்சுகளில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், கூட்டணி தொடர்பில் இறுதி உடன்பாட்டை எட்டுவதற்கான முக்கிய சந்திப்பொன்று கடந்த புதன்கிழமை கொழும்பில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடைபெற்றுள்ளது.
இது மிகவும் ரகசியமாக திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ள கூட்டமாக உள்ளதுடன், கூட்டத்தில் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களின் பாதுகாப்பு அதிகாரிகளுக்குக் கூட அருகில் இருக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. புதிய கூட்டணிக்கு ஆதரவளிக்க தயாராக உள்ள அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தி 25 எம்.பி.க்கள் வரை சந்திப்பில் கலந்துகொண்டுள்ளனர்.
இந்தக் கூட்டத்தில் பேசப்பட்ட எதையும் பகிரங்கப்படுத்த வேண்டாம் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.