சித்தங்கேணியில் காவல்துறையினரால் தாக்கப்பட்டு உயிரிழந்ததாக கூறப்படும் இளைஞனின் மரணம் தொடர்பான சட்ட மருத்துவ அறிக்கை வெளியாகியுள்ளது.
“அந்த அறிக்கையில் உடல் முழுவதும் அடிகாயங்கள், இயற்கையான மரணம் இல்லை, உடற்கூற்று மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும்,விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் கடுமையாக அடித்து துன்புறுத்தப்பட்டதால் நுரையீரல் பாதிப்புக்குள்ளாகி உயிரிழந்தார் எனவும் சட்ட மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மல்லாகம் நீதிவான் நீதிமன்றின் உத்தரவில் கட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரான நாகராசா அலெக்ஸ் என்பவரே (வயது 25) நேற்றையதினம்(19) உயிரிழந்தார்.
சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின்னர் சந்தேக நபர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தவரின் சடலம் உடற்கூறு பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை சவ அறையில் வைக்கப்பட்டிருந்தது.
பின்னர் சடலம் இன்று(20) நண்பகல் உடற்கூறு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் இந்த அறிக்கை வெளியிட்ப்பட்டுள்ளது.
உடற்கூறு பரிசோதனையின் பின்னரே உயிழப்புக்கான காரணம் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.