உத்தரகாண்ட் மாநிலத்தில் உத்தரகாசி பகுதியில் பிரம்மகால்-யமுனோத்திரி நெடுஞ்சாலையில் சில்க் யாரா-தண்டல்கான் பகுதிகளுக்கு இடையே மலைக்கு கீழ் நீண்ட சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. உத்தரகாண்ட் மாநிலத்தின் ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்கு எளிதான போக்குவரத்து வசதிக்காக இந்த சுரங்கப்பாதையை கடந்த சில ஆண்டுகளாக அமைத்து வருகிறார்கள்.
இமயமலையை ஒட்டிய பகுதியில் அமைந்து உள்ள இந்த சுரங்கத்தில் 41 தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்து உள்ளனர். இந்த நிலையில் கடந்த 12 ஆம் திகதி திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது சுரங்கம் இடிந்து விழுந்து அதன் வழி அடைபட்டதன் காரணமாக 41 தொழிலாளர்களும் சுரங்கத்திற்குள் சிக்கித் தவிக்கின்றனர். 10 நாட்களுக்கும் மேலாக அவர்கள் சுரங்கத்திற்கு உள்ளேயே உயிருக்கு போராடி வருகின்றனர்.
அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தாலும், இன்னும் வெற்றி கிடைக்கவில்லை. தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், மாநில பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு படையினர் என ஏராளமான வீரர்கள் அங்கு மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மொத்த அரசு நிர்வாகமும் அங்கு திரண்டு உள்ளது. ஏராளமான ஊடங்கள் அங்கு சென்று நேரடி கள நிலவரங்களை வெளியிட்டு வருகின்றன. நாட்டின் ஒட்டு மொத்த பார்வையும் உத்தரகண்ட் சுரங்கத்தின் மீதே உள்ளது.
உத்தரகண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி மீட்புப் பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி உத்தரகண்ட் முதலமைச்சர் தாமியிடம் நேற்று 2 வது நாளாக தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு மீட்பு விபரங்களை கேட்டறிந்தார். தொழிலாளர்கள் அனைவரையும் பத்திரமாக மீட்பதில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தன்னிடம் அறிவுறுத்தியதாக தாமி தெரிவித்து உள்ளார்.