நாட்டில் இன்று அரச ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதில் சிக்கல் நிலை காணப்படுகின்றது, ஆனால் நாட்டை விட்டுத் தப்பிச் சென்ற ஒரு ஜனாதிபதிக்கு 3 கோடி ரூபா கொடுப்பனவு வழங்கப்படுகின்றது என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
முறைகேடான நடவடிக்கைகள் காரணமாகவே எமது நாடு சீரழிந்தது. அரச ஊழியர் ஒருவர் சேவையில் இருந்து விலகினால் அவருக்கு ஓய்வூதியம் கிடைப்பதில்லை. ஆனால் நாட்டின் ஜனாதிபதி தப்பிச்சென்றார் அவருக்கு தற்போது வருடத்துக்கு 3கோடி கொடுப்பனவு வழங்கப்படுகிறது.
சேவையில் இருந்து தப்பிச் சென்ற ஒருவருக்கு ஏன் 3 கோடி வழங்க வேண்டும்? அரச சேவையில் இருந்து தப்பிச்செல்பவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுவதில்லை.
அத்துடன் தேர்தல் ஆணைக்குழு தங்களுக்கு இருக்கும் அதிகாரத்துக்கமைய செயற்படாமல், தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்துக்கு கடிதம் எழுதி வருகிறது.
இந்த அரசாங்கம் தேர்தலுக்கு பயம். தேர்தலுக்கு அச்சப்படும் அரசாங்கத்துக்கு சர்வதேசத்தின் உதவி கிடைக்கப்போவதில்லை.
மார்ச் மாதம் நடத்த இருந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலை இன்னும் நடத்தவில்லை. அதனால் நீதிமன்றம் இது தொடர்பாக உறுதியான தீர்ப்பொன்றை வழங்க வேண்டும். பிரதேச சபை உறுப்பினர்கள் இல்லாததால் கிராமங்களில் ஏற்பட்டு வரும் பிரச்சினைகளை அந்த மக்கள் யாரிடம் சொல்வது என தெரியாமல் இருக்கின்றனர். அதனால் தேர்தலை நடத்த பணம் இல்லை என அரசாங்கத்துக்கு தெரிவிக்க முடியாது.
அரச ஊழியர்களுக்கு 10ஆயிரம் ரூபா அதிகரிக்கப்பட்டிருக்கிறது. அதனால் தேர்தல் ஆணைக்குழு நீதிமன்றத்தை நாடி உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.