இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் இலங்கை எதனையும் செய்யாதென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்தியாவுடனான இலங்கையின் நட்புறவு, சீனாவுடனான புதுடெல்லியின் உறவுகளில் தாக்கம் செலுத்தாது. இந்தியாவின் பாதுகாப்பை பாதிக்கும் வகையிலான தீர்மானங்களை இலங்கை செய்யாது என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
Firstpost ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அளித்துள்ள நேர்காணலிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
“இந்தியா தனது சொந்த பாதுகாப்பு குறித்து கவலை கொண்டுள்ளது. இலங்கை தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்களை ஏற்படுத்திக்கொள்ளும் வகையில் எதனையும் செய்யாது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியை அவர் முதலமைச்சராக இருந்த காலத்திலிருந்தே எனக்குத் தெரியும். அவருடனான அண்மைய சந்திப்பு முன்னேற்றகரமானதாக இருந்தது. வர்த்தகம் மற்றும் முதலீடு ஊக்குவிப்பு குறித்து ஆழமாக கலந்துரையாடினோம்.
கடந்த ஆண்டு நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கியபோது இந்தியாவின் உதவி வலுவானதாக இருந்தது. கடந்த ஆண்டு மே மாதம், இலங்கைக்கு இந்தியா வழங்கியிருந்த ஒரு பில்லியன் டொலர் கடனை செலுத்த ஒரு வருடகால நீடிப்பையும் இந்தியாக நீட்டித்தது. கடன் செலுத்தல் நீடிப்பானது பின்னர் இந்தியாவால் நீட்டிக்கப்பட்ட 4 பில்லியன் அமெரிக்க டொலர் அவசர உதவியின் ஒரு பகுதியாக மாறியது.‘‘ எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.
இந்தியாவில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் குறித்து கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, “மாநில தேர்தல்கள் என்ன சொல்கிறது என்று பார்ப்போம். ஒரே தலைவர் தலைமையில் ஒரே கட்சியாக இருப்பதால் பாஜகவுக்குத்தான் தேர்தல் சாதகமாக இருக்கும். புதுடில்லியில் நடக்கும் சம்பவங்களை இலங்கை உற்று நோக்கி வருகிறது.
இலங்கையின் தற்போதைய பொருளாதாரம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு கருத்து தெரிவித்த ஜனாதிபதி, “நாங்கள் இன்னும் நெருக்கடியில் இருந்து வெளியேறவில்லை. ஆனால் வெளியே வருவோம். வரவு – செலவுத் திட்ட பற்றாக்குறையை சமநிலைப்படுத்த வேண்டும். எமது வருவாயை அதிகரிக்க வேண்டும். 2024-2025 இல் எமது திட்டங்கள் சிறப்பாக இருக்கும் என்று நம்புகிறேன்.‘‘ எனக் கூறியுள்ளார்.