தான் இன்று (25) முதல் பதவியில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்களுக்கு அறிவித்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நான்காவது முறையாக அவருக்கு வழங்கப்பட்ட சேவை நீடிப்பு நிறைவடைந்ததை கவனத்தில் கொண்டு அவர் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
சி.டி.விக்கிரமரத்ன கடந்த மார்ச் மாதம் 25ஆம் திகதி பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து ஓய்வு பெறவிருந்தார்.
எவ்வாறாயினும், ஜனாதிபதி, அவருக்கு 3 மாத கால சேவை நீடிப்பு வழங்கியதுடன், அந்த காலம் முடிவடைந்த பின்னர், ஜூலை மாதம் 9 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் அவருக்கு மேலும் 3 மாத சேவை நீடிப்பு வழங்கப்பட்டது.
மூன்றாவது முறையாக மேலும் 3 வார சேவை நீட்டிப்பு ஒக்டோபர் 13 ஆம் திகதி வழங்கப்பட்டது,
சி.டி. விக்கிரமரத்னவுக்கு நான்காவது சேவை நீடிப்பு வழங்கப்பட்ட நிலையில், நவம்பர் மாதம் 3ஆம் திகதி முதல் நேற்று (24ஆம் திகதி) வரை அது அமுலில் இருந்தது.
எனினும், பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் சேவை நீடிப்புக்கு அரசியலமைப்பு பேரவை ஒப்புதல் அளிக்க மறுத்த பின்னணியில் இத்தகைய சேவை நீடிப்பு வழங்கப்பட்டிருந்தது.
அதன்படி நான்காவது பணி நீட்டிப்பு நேற்றுடன் முடிவடைந்த நிலையில் மீண்டும் பொலிஸ் மா அதிபர் பதவி காலியாக உள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில் தான் பதவியில் இருந்து ஓய்வு பெறப்போவதாக பொலிஸ் மா அதிபர், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்களுக்கு அறிவித்துள்ளதாக பொலிஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
காலியாகவுள்ள பொலிஸ் மா அதிபர் பதவிக்கு அடுத்த சில நாட்களில் புதிய பொலிஸ் மா அதிபர் நியமிக்கப்படவுள்ளதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.