முல்லைத்தீவு மாவட்டத்தில் இரட்டைவாய்க்கால் அதாவது 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்த காலப்பகுதியில் மாவீரர்களின் வித்துடல்கள் விதைக்கப்பட்ட இரட்டைவாய்க்கால் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நாளுக்கான ஏற்பாடுகள் செய்வதற்காக மக்கள் முன்வந்த போது காவல்துறையினரால் இடையூறு விளைவிக்கப்பட்டது.
குறிப்பாக நேற்றைய தினம் துயிலும் இல்ல ஏற்பாடுகளை மேற்கொள்ளும் செயற்பாட்டாளர் ஒருவர் வீட்டில் ஆட்கள் இல்லாத வேளை காவல்துறையினர் அங்குள்ள சிவப்பு மஞ்சள் கொடிகளை எடுத்துச் சென்றுள்ளனர்.
அத்தோடு, துயிலும் இல்லத்திற்கு செல்லும் பிரதான வீதியில் காட்சிப்படுத்தியிருந்த மாவீரர் நாள் தொடர்பான பதாகையை அகற்ற வேண்டுமென காவல்துறையினர் முரண்பட்டிருந்தனர்.
அதனைத்தொடர்ந்து, சமூக செயற்பாட்டாளர் வீரசிங்கம் மற்றும் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரனையும் காவல்நிலையத்திற்கு வருகை தருமாறு அழைத்து நீதிமன்ற கட்டளைகளை மீறி செயற்படுவதாக கூறி பல கேள்விகளை கேட்டு வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர். அதன்போது, இருவரிடம் சுமார் ஒவ்வொரு மணித்தியாலத்திற்கு மேல் வாக்குமூலம் பதிவு செய்து பின்னர் சமூக செயற்பாட்டாளர் வீரசிங்கத்திடம் எடுத்துச் செல்லப்பட்ட கொடிகளையும் மீள வழங்கியுள்ளார்கள்.
தற்போது இரட்டைவாய்க்கால் துயிலும் இல்லத்திலே ஏற்பாட்டு பணிகள் மிகவும் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன.
அத்தோடு, நாளைய நாள் மாவீரர் தின நிகழ்வுகள் மிகவும் சிறப்பாக இடம்பெறும் எனவும் குறித்த இடத்தில் அனைத்து மக்களையும் அச்சமின்றி அஞ்சலி செலுத்த வருமாறு பணிக் குழுவை சேர்ந்தவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.