ஜனாதிபதி தேர்தல் அடுத்தவருடம் நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள நிலையில் ஐக்கிய தேசியக்
கட்சி மற்றும் பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகள் இணைந்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.
அதற்கான நடவடிக்கைகளில் பொதுஜன பெரமுனவின் முன்னணி தரப்பினர் ஈடுபட்டுவருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன. அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர் பதவி வகிக்கும் ஒருவர் உட்பட பொதுஜன பெரமுன உறுப்பினர்களான அமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பலரும் அது தொடர்பில் முனைப்புடன் செயற்பட்டு வருவதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.
அந்தவகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை அடுத்து வரும் ஜனாதிபதித்தேர்தலிலும் வேட்பாளராக நிறுத்தி அதற்கான பிரசார நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான பொறுப்பை அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பு வகிக்கும் சிரேஷ்ட அமைச்சரொருவர் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவி வகித்த போதும் மற்றும் பிரதமராக செயற்பட்ட போது அவருடைய தனிப்பட்ட ஆளணியின் பொறுப்பாளர்களாக செயற்பட்ட முக்கியஸ்தர்கள் சிலரும் அதனோடு
இணைந்து செயற்பட்டு வருவதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. அதேவேளை, அரசாங்கத்தின் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் அமைச்சர்களாக உள்ள இளைஞர்களான உறுப்பினர்களில் பெருமளவிலானோர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவை
வழங்குவதற்கு தயாராகவுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
அத்துடன் அரசாங்கத்தில் பதவிகளை வகிக்கும் பொதுஜன பெரமுனவின் அமைச்சர்களில் பெரும்பாலானோர் அரசியல் ரீதியாக தற்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனேயே இருப்பதாகவும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.