மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் உள்ளிட்ட 4 பேருக்கு, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதி வழங்கியுள்ளது.
அம்பிட்டிய சுமனரத்ன தேரருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி நடைபெற்ற நிகழ்வொன்றில் பிரதம அதிதியாக கலந்து கொள்ள சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க மட்டக்களப்புக்கு பயணம் செய்திருந்தார்.
இதன் போது, ரணில் விக்ரமசிங்கவின் மட்டக்களப்புக்கான பயணத்தை எதிர்த்து வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பில் மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் உள்ளிட்ட 4 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு இன்று மட்டக்களப்பு நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதையடுத்து, மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் அம்பிட்டிய சுமனரத்ன தேரர் உள்ளிட்ட நால்வருக்கும் பிணையில் செல்ல அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இரு சரீரப் பிணையில் செல்ல நீதவான் குறித்த தரப்பினருக்கு அனுமதியளித்ததுடன், காவல் நிலையத்துக்கு சென்று வாக்குமூலத்தை பதிவு செய்யுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த வழக்கு தொடர்பில் நீதிமன்றத்தில் முன்னிலையாகாத மேலும் இருவருக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
இதேவேளை, இந்த வழக்கு மீதான அடுத்த விசாரணை எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 18 ஆம் திகதி மேற்கொள்ளப்படுமென நீதவான் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.