பாராளுமன்ற வளாகத்தில் உள்ள பெறுமதிமிக்க கட்டடக்கலையைப் பாதுகாக்கும் திட்டம் தொடர்பான ஆரம்ப கட்டக் கலந்துரையாடல் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.
இலங்கை பாராளுமன்றத்தின் முன்மொழிவுக்கு அமைய இடம்பெறவுள்ள இந்தத் திட்டம் தொடர்பான ஆரம்ப கட்டக் கலந்துரையாடலில் பல நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
பாராளுமன்ற வளாகத்தில் உள்ள பெறுமதிமிக்க கட்டட வடிவமைப்பில் காணப்படும் கலாசார அடையாளங்கள், இயற்கை நிலக்காட்சி மற்றும் சூழல், வரலாற்று ரீதியாகப் பொருந்தும் சூழல், தேசிய அடையாளம் ஆகியவற்றின் காரணமாக, எதிர்கால சந்ததியினருக்காக அவற்றைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் என்பன இங்கு வலியுறுத்தப்பட்டது.
இவற்றை எதிர்கால சந்ததியினருக்கு கலாசார அடையாளமாகப் பாதுகாப்பது, படைப்பாளர்களுக்கு உரிய அங்கீகாரத்தை வழங்குவதுடன், அவர்களின் பதிப்புரிமையை பாதுகாப்பது மற்றும் கட்டடக்கலை, கலைமதிப்பக்கள் அழியாமல் பாதுகாப்பது இதன் நோக்கமாகும்.