கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணிகளை ஏற்றி வந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று ஹபரனை காட்டிற்குள் வைத்து பயணிகளை இறக்கி விட்ட சம்பவம் பெரும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான, வாழைச்சேனை தரிப்பிட பேருந்து ஒன்று நேற்றைய தினம் 01 இரவு 9 மணியளவில் கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணிகளை ஏற்றி வந்துள்ளது.
இவ்வாறு வந்த பேருந்து ஹபரனை காட்டிற்குள் வைத்து தானாக நிறுத்தப்பட்டுள்ளது.
என்ன நடக்கிறது என்று பயணிகள் நடத்துனரை வினவிய போது, பேருந்தில் டீசல் தீர்ந்து விட்டதாகவும்,ஒன்லைனில் நீங்கள் பயணசீட்டை வாங்கியதால் எங்களிடம் டீசல் அடிப்பதற்கு பணமும் இல்லை என்று கூறியுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் உடனடியாக வாழைச்சேனை பஸ் டிப்போவிற்கு தொலைபேசி மூலம் அழைப்பை ஏற்படுத்தி முறைப்பாடொன்றை பதிவிட்டுள்ளதுடன்,பேருந்தில் பயணம் செய்த பயணிகள் பிற பேருந்துகளில் மாற்றப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் அந்த பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவர் கருத்து தெரிவிக்கையில்
ஹபரனை காடு எவ்வாறான காடு என்று எம் எல்லோருக்கும் தெரியும். யானை ஏதும் வந்து அங்கு அசம்பாவிதங்கள் ஏதும் இடம் பெற்றால் இதற்கு யார் பொறுப்பு கூறுவார்கள்,உண்மையில் நாங்கள் இதை நடத்துனர்கள் மற்றும் பேருந்து நிலைய உயர் அதிகாரிகளின் அசமந்தப்போக்காகவே பார்க்கின்றோம் என்று விசனம் தெரிவித்திருந்தார்.
அதேசமயம் இது தொடர்பில் இன்று 02 எமது battinaatham ஊடகம் வாழைச்சேனை பிரதான பேருந்து தரிப்பிட நிலையத்திற்கு தொடர்பை ஏற்படுத்தி, இது தொடரில் கேட்டறிந்த போது எமது தரிப்பிடத்திற்கு இது தொடர்பில் எந்த முறைப்பாடுகளும் வரவில்லை எனவும், இது தொடர்பில் நாங்கள் நடத்துனரை தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தனர்.