இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தம் முடிவிற்கு வந்து, மீண்டும் மோதல் ஆரம்பித்துள்ள நிலையில், இஸ்ரேல் செய்யறிவு (AI) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தாக்குதல் நடத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Gospel (நற்செய்தி) என பெயரிடப்பட்டுள்ள இஸ்ரேலின் செய்யறிவு அமைப்பு தாக்க வேண்டிய இலக்குகளை உருவாக்க பயன்படுத்தப்படுகிறது.
Gospel முதன்முதலில் 2021 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற 11 நாள் போரில் பயன்படுத்தப்பட்டது.
இயந்திர வழி கற்றல் மற்றும் மேம்பட்ட கணினி தொழில்நுட்பத்தின் மூலம் இராணுவத்திற்கான இலக்குகளை இது உருவாக்கிக் கொடுக்கும் திறன் கொண்டது.
உள்ளீடுகளின் அடிப்படையில் மிக விரைவாகவும் தானியங்கி முறையிலும் இலக்குகளை Gospel உருவாக்குகிறது.
ஹமாஸ், இஸ்லாமிக் ஜிகாத் என அறியப்பட்டவர்களின் செயற்பாட்டு தளங்கள், அவர்களால் பயன்படுத்தப்படும் தனி வீடுகள் ஆகியவற்றை AI அமைப்பு கண்டறிந்துவிடுகிறது.
இந்நிலையில், ஒரு வார கால தற்காலிக போர் நிறுத்தம் முடிந்த நிலையில், இஸ்ரேலிய தாக்குதலில் காஸாவில் 178 பேர் உயிரிழந்ததாக ஹமாஸ் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஆனால், இஸ்ரேல் இராணுவமோ ஹமாஸ் பதுங்கியிருக்கும் இடம் என அடையாளம் காணப்பட்ட 200 இடங்களை மட்டுமே குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளது.