இலங்கையின் வடக்கு-கிழக்கில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தினை பயன்படுத்தி சமீபத்தில் இடம்பெற்ற கைதுகள் குறித்து கரிசனை கொண்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை தெரிவித்துள்ளது.
இது மனித உரிமைகளை மீறும் சட்டத்தினை பயன்படுத்துவதை நிறுத்திவைப்பது குறித்த அரசாங்கத்தின் வாக்குறுதிகளுக்கு மாறானது எனவும் அது தெரிவித்துள்ளது.
பயங்கரவாத தடைச்சட்டத்தை கைவிடவேண்டும் எனவும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது. இதேவேளை,இலங்கையில் கைது செய்யும் நடவடிக்கைகளுக்காகத் தொடர்ந்து பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் கவலை வெளியிட்டுள்ளது.
சர்வதேச தர நிலைகள் மற்றும் மனித உரிமைகள் மரபுகளுக்கு ஏற்ப சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்றும், இதற் கிடையில் உறுதிமொழிகளின்படி பயங்கரவாதத்தடைச் சட்டத்தைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.
மாவீரர் நிகழ்வுகளில் கலந்துகொண்டவர்கள் கைதுசெய்யப்பட்டு வரும் பின்புலத்திலேயே
ஐரோப்பிய ஒன்றியம் தமது கவலையை வெளியிட்டுள்ளது.மட்டக்களப்பு, வெல்லாவெளியில் முன்னெடுக்கப்படவிருந்த மாவீரர் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்த ஜனநாயகப் போராளிகள்
கட்சியின் உபத் தலைவர் என்.நகுலேஸ் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்தார்.
அதேபோன்று புலிகளின் ஆடையை அணிந்திருந்ததாக கூறி யாழில் இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டிருந்தார். அத்துடன், மாவீரர் நிகழ்வில் கலந்து கொண்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த கைதுகளுக்கு சர்வதேச ரீதியில் கடும் எதிர்ப்புகள் வலுபெற்றுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது