ரி 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2024) நடைபெறவுள்ள நிலையில், இந்திய அணியில் இருந்து விராட் கோலியை நீக்கி விடுவதற்கு இந்திய அணியின் தற்போதைய தலைவர் ரோகித் சர்மா சதி செய்துவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இரண்டு நாட்களுக்கு முன்னர் இடம்பெற்ற இந்திய கிரிக்கெட் சபையின் முக்கியக் கூட்டத்தின் போது அடுத்த ஆண்டு (2024) இடம்பெறவுள்ள ரி 20 கிரிக்கெட் உலகக் கிண்ணம் தொடர்பில் தீவிர அவதானம் செலுத்தப்பட்டு வருவதாக பேசப்பட்டது.
குறிப்பாக இந்திய அணியை தயார் செய்வது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது, ரி 20 போட்டிகளில் இந்திய அணியின் தலைவராக ஹர்த்திக் பாண்டியா தலைவராக செயற்பட்டார்.
எனினும், நடந்து முடிந்த உலகக் கிண்ண தொடரில் அவர் காயமடைந்திருந்த காரணத்தினால் அவர் போட்டிகளில் இருந்து விலக நேரிட்டது.
இந்நிலையில், அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ள ரி 20 கிரிக்கெட் உலகக் கிண்ண தொடரின் போது இந்திய அணியை ரோகித் ஷர்மா வழிநடத்தவுள்ள நிலையில் உலகக் கிண்ண தொடரில் விராட் கோலியை அணியில் சேர்க்காமல் தவிர்க்க வேண்டும் என ரோகித் ஷர்மாவால் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
யஸ்ஸவி ஜேஸ்வால், சுப்மன் கில் போன்ற இளம் வீரர்கள் அணியில் இருப்பதனால் விராட் கோலியை அணியில் உள்வாங்காது தவிர்க்க வேண்டும் என யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
அணித் தெரிவு விவகாரத்தில் இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், இந்திய கிரிக்கெட் சபையிலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அடுத்த ஆண்டு ரி 20 உலகக் கிண்ண தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னர் ஐ.பி.எல் போட்டிகள் நடைபெறவுள்ளன, ஒருவேளை, ஐ.பி.எல் போட்டிகளில் விராட் கோலி சிறப்பாக செயற்பட்டால் உலகக் கிண்ண போட்டிகளில் அவரை தவிர்ப்பது இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
அதுமாத்திரமன்றி, நடந்து முடிந்த உலகக் கிண்ண போட்டிகளில் இந்திய அணி சார்பாக பல புதிய சாதனைகளை விராட் கோலி படைத்திருந்தார்,உலகக் கிண்ண தொடரில் 700க்கும் மேற்பட்ட ஓட்டங்களை குவித்து புதிய உலக சாதனையையும், தொடர் ஆட்டநாயகன் விருதினையும் கோலி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.