இலங்கையில் 2022 ஆம் ஆண்டில் பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரிக்கு வந்த இராணுவத் தளபதிகள் குழு, உண்டு மகிழ்வதற்காக, ஐந்து நாட்களுக்கு கிட்டத்தட்ட 11 இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக செலவினங்களை கட்டுப்படுத்துவதற்காக திறைசேரி விடுத்துள்ள சுற்றறிக்கைக்கு முரணாக இந்த தொகை செலவிடப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் அறிக்கையின் படி, மேற்படி பணியாளர் கல்லூரியின் விவகாரங்களை ஆய்வு செய்ய வந்த பாதுகாப்பு செயலாளர், பாதுகாப்பு அதிகாரி மற்றும் முப்படை தளபதிகளுக்கே இவ்வாறு செலவு செய்யப்பட்டுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கல்லூரிக்கு 2019 முதல் 2022 வரை 13 கோடி ரூபாய்க்கு மேல் செலவில் கட்டப்பட்ட நான்கு அடுக்கு நூலகம் மற்றும் தேர்வுக் கூட கட்டிடத்தில் தண்ணீர் கசிவு பிரச்சினையை சரி செய்ய முடியவில்லை என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.