தமிழ்த் தேசியக் கட்சிகளின் போராட்டமென்பது கிட்டத்தட்ட தொல்பொருள் திணைக்களத்திற்கு எதிரான போராட்டமாக மாறியிருக்கின்றது. திருகோணமலை கன்னியா வெந்நீரூற்றில் தொடங்கியது-பின்னர் குருந்தூர்மலையில் தரித்துநின்று, இப்போது வெடுக்குநாறிமலையை நோக்கிச் சென்றிருக்கின்றது. நிச்சயம் இதற்கு பின்னர் பிறிதொரு விடயம் நிகழும்.
குறித்த விடயம் நிகழும்போது, மீண்டும், தமிழ்த் தேசியக் கட்சிகள் அந்த இடத்தில் ஒன்று கூடி அடுத்த கட்டப் போராட்டம் தொடர்பில் ஆராய்வர். இந்த பிரச்னைகள் அனைத்திற்குமான அடிப்படையான பிரச்னை, தமிழ்
மக்களுக்கான அரசியல் தீர்வாகும். ஆகக் குறைந்தது மாகாண சபை முறைமையாவது, இயங்கு நிலையில் இருக்கவேண்டும். அதுவும் தற்போதில்லை.
இந்த நிலையில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பிலாவது கட்சிகள் பேசுகின்றனவா என்றால் அதுவும் இல்லை.13ஆவது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்தும் விடயம் தொடர்பில் ஆறு
தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து, இந்திய பிரதமருக்கு கடிதம் எழுதியதை தொடர்ந்து, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி (தமிழ் தேசிய மக்கள் முன்னணி) 13ஆவது திருத்தச்சட்டத்தை எதிர்ப்பதாக கூறி, யாழ்ப்பாணத்தில் ஊர்தி வலம்
வந்திருந்தனர்.
இதற்கு ஒரு சில புலம்பெயர் அமைப்புக்களும் உறுதுணையாக இருந்தன. ஓரிரு நாட்களுக்கான, 13-எதிர்ப்பு ஊர்தி வலத்துடன் முன்னணியின் அரசியல் தீர்விற்கான போராட்டம் முடிந்துவிட்டது. அதன் பின்னர் ரணில்
விக்கிரமசிங்க, தேசிய இனப்பிரச்னைக்கான தீர்வின் அவசியம் தொடர்பில் பேசினார் – 13ஆவது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்தப் போவாக கூறினார். வழமைபோல் முன்னணி 13ஆவது தீர்வில்லையென்று கூறிவிட்டு ஒதுங்கிவிட்டது.
13ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்படுமா அல்லது இல்லையா என்பதில் சந்தேகங்கள் உண்டு. ஆனால் அதனை முழுமையாக அமுல்படுத்துவது அவசியமென்னும் கருத்தை பெரும்பான்மையான தமிழர் தரப்புக்கள் ஆதரிக்கின்றன. அது அமுல்படுத்தப்படுமாக இருந்தால், அதனை ஒரு ஆரம்பப் புள்ளியாகக் கொள்ள முடியும். அதனை ஒரு ஆரம்பப் புள்ளியாக நோக்கமுடியாதென்று வாதிடுவோருமுண்டு. அவர்களது கருத்தே சரியானதென்றால், தாங்கள் கூறும் சரியானதிற்காக அவர்கள் என்ன செய்துகொண்டிருக்கின்றனர். 13 இற்கு அப்பால் செல்வதற் கான எத்தகைய போராட்டங்களை இதுவரையில் முன்னெடுத்திருக் கின்றனர்? இன்றைய சூழலில், தமிழ் மக்களைப் பொறுத்தவரையில், 13ஆவது தொடர்பில் பேசுவதே ஒரு வகையில் ஆறுதலானதுதான். ஏனெனில் அவ்வாறு பேசுகின்றபோது, கூடவே தமிழ் மக்களுக்கென்று பிரத்தியேகமான அரசியல் பிரச்னையொன்று இருப்பது நினைவூட்டப்படுகின்றது. அந்த வகையிலும் 13 ஒரு ஆறுதலான விடயம்தான். ஆனால் ஒற்றையாட்சி முறைமைக்குள் இருக்கின்ற 13ஆவது திருத்தச்சட்டம் ஒரு தீர்வல்ல, அதனை ஒரு ஆரம்பப் புள்ளியாகக்கூட ஏற்றுக்கொள்ள முடியாதென்று கூறுவோர், தாங்கள் கூறுவதை அடைவதற்காக, கடந்த 13 வருடங்களில் எவ்வாறான அர்ப்பணிப்புக்களை காண்பித்திருக்கின்றனர்? அவ்வப்போது அறிக்கைகள் வெளியிட்டதற்கு அப்பால் – பாராளுமன்றத்தில் பேசியதற்கு அப்பால்?கூட்டமைப்பு சமஷ்டியை வலியுறுத்தியதை எதிர்ப்பதற்கு – ‘ஒரு நாடு இரண்டு தேசங்கள்’ – என்று பிறிதொரு சுலோகத்தை காங்கிரஸ் உயர்த்தியது.
சமஷ்டியை கூட்டமைப்பால் அடைய முடியாது – ஆனால் மக்கள் எங்களை தெரிவு செய்தால் – நாங்கள் ஒரு நாடு இரண்டு தேசத் தீர்வை பெற்றுத் தருவோமென்பதுதான் காங்கிரஸின் வாதம். ஆனால் கடந்த 13 வருடங்களில் இவர்கள் முன்வைத்த சுலோகங்கள் ஆகக் குறைந்தது, அவர்களது கட்சியிலுள்ளவர்களுக்காவது விளங்கியதாக தெரியவில்லை.
கூட்டமைப்பால் சமஷ்டிக்காக போராட முடியவில்லை – அவர்கள் போராடப் போவதுமில்லை – அவ்வாறாயின் ஏனையவர்கள் தாங்கள் கூறும் விடயங்களை அடைவதற்காக போராட வேண்டுமல்லவா? ஒட்டுமொத்தமாக நோக்கினால், தாங்கள் கூறும் எதுவும் சரிவரப் போவதில்லையென்பதில் – அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களுமே தெளிவாகவே இருக்கின்றனர். இந்த இடத்தில்தான்யதார்த்த ரீதியாக விடயங்களை முன் வைப்பவர்களின் வாதம் பலமடைகின்றது.