ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இன்று சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது, ரஷ்ய ஜனாதிபதி சவூதி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிகளுடன் இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது.
குறித்த கலந்துரையாடல் இன்று (06.12.2023) நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரஷ்யா மற்றும் சவுதி அரேபியாவுக்கு இடையில் நீண்டகால நல்லுறவு பேணப்பட்டு வரும் நிலையில், விளாடிமிர் புடின் சவுதி அரேபியாவில் செல்வாக்கு மிகுந்த நபராக காணப்படுகிறார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாயில் ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாடு இந்த நாட்களில் நடத்தப்பட்டாலும், ரஷ்ய ஜனாதிபதி அத்தகைய நிகழ்வில் பங்கேற்பாரா அல்லது அவரது மத்திய கிழக்கு பயணத்தின் நோக்கம் என்ன என்பது குறித்து ரஷ்யா இதுவரை பதிலளிக்கவில்லை.
காசா மீதான இஸ்ரேலின் தற்போதைய தாக்குதலானது அமெரிக்க இராஜதந்திரத்தின் தோல்வி என புடின் குறிப்பிட்டுள்ளதோடு இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனியர்களுடனான நட்புறவு காரணமாக ரஷ்யாவினால் மத்தியஸ்தராக செயற்பட முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், போர்க்குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளதால் ரஷ்ய ஜனாதிபதியை கைது செய்ய சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ள நிலையில், அவர் மேற்கொள்ளும் முதல் சர்வதேச பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.