50 களில் இருந்து சிங்களம் மட்டும் என்று கூறும் பொறிமுறைக்குள் இருந்து கொண்டு ஒரு நாடாக முன்னேற முடியாது. எனவே சிங்கள மொழி உள்ளடங்களாக பிற மொழிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுவது போல் ஆங்கில மொழிக் கல்விக்கும் முன்னுரிமை வழங்க வேண்டிய நேரம் வந்துள்ளதென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நேற்று (05) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத்திட்டத்தில் கல்வி அமைச்சுக்கான செலவுத்தலைப்பு மீதான விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எமது நாட்டின் கல்விப் பரப்பில் புதிய மாற்றங்களை உள்வாங்கி கல்வியின் புதிய யுகத்திற்குள் நுழைய வேண்டும். 50 களில் இருந்து சிங்களம் மட்டும் என்று கூறும் பொறிமுறைக்குள் இருந்து கொண்டு ஒரு நாடாக முன்னேற முடியாது. நாமாகவே சுவர்களைக் கட்டிக்கொண்டு, எல்லைகளை வகுத்து, குறுகிய மனப்பாங்குடன் செயல்படும் போக்கில் ஒரு நாடாக உண்மையான சுபீட்சத்தை எட்ட முடியாது என்பதால்,சிங்கள மொழி உள்ளடங்களாக பிற மொழிகளுக்கும் முன்னுரிமை வழங்கப்படுவது போலவே ஆங்கில மொழிக் கல்விக்கும் முன்னுரிமை வழங்க வேண்டிய நேரம் வந்துள்ளது என்றார்.
எனவே, நாட்டில் இருக்கும் 10,126 பாடசாலைகளிலும் ஆங்கில கல்வியை அபிவிருத்தி செய்ய வேண்டும். அதேபோன்று தற்போது பாடசாலைகளில் 6ஆம் தரத்தில் இருந்து 13ஆம் தரம் வரை கற்பிக்கப்படும் தொழிநுட்ப கல்வியை 1ஆம் தரத்தில் இருந்து 13ஆம் தரம் வரைக்கும் விருத்தி செய்ய வேண்டும். அத்துடன் தொழிந்டப கல்வியை தாய் மொழியில் அல்லாமல் ஆங்கில மொழியிலேயே கற்பிக்க வேண்டும். அதன் மூலமே அதன் உண்மையான கல்வியை பெற்றுக்கொள்ள முடியும். அதேநேரம் நாட்டில் இருக்கும் அனைத்து பாடசாலைகளையும் ஸ்மாட் வசதி உள்ள பாடசாலைகளாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு முன்னரும் பின்னரும் கல்வியில் இருந்து வெளியேறும் மாணவர்கள் தொழிற்பயிற்சி கல்வியை நாடினாலும்,தற்போது, அதன் தரம் குறைந்துள்ளது.உயர்கல்வி வாய்ப்புகளை வலுப்படுத்த வேண்டும். உயர் கல்விக்கான வாய்ப்புகளை இழந்தோர்களுக்கான வாய்ப்புகளையும் விரிவுபடுத்த வேண்டும் நாட்டில் 70 வீதமானவர்களுக்கு பல்கலைக்கழக வாய்ப்பு கிடைப்பதில்லை. அவர்களுக்கும் உயர்கல்விக்கான உரிமை வழங்கப்பட வேண்டும்.
அத்துடன், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பாக அரசாங்கம் மீண்டுமொரு முறை சிந்திக்க வேண்டும். மனப்பாட கல்வி முறையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். தரம் 5, கல்வி பொதுத் தராதர சாதாரண மற்றும் உயர் தர பரீட்சைகளின் சில பாடங்கள் மனப்பாடம் செய்து விடை எழுத வேண்டி இருக்கிறது என்றார்.