இலங்கையில் இந்து பாரம்பரியத்தின் இருப்புக்கே ஆபத்து ஏற்பட்டுள்ளதாக புலம்பெயர் அமைப்புகள்
இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளன. ஏழு புலம்பெயர் அமைப்புகள் இணைந்து இந்தக் கடிதத்தை எழுதியுள்ளன.அந்தக் கடிதத்தில், “இலங்கை அரசாங்கம் தனது இராணுவத்தின் உதவியுடன் வடக்கு, கிழக்கில் இந்து கலாசாரம் – பாரம்பரியம் – கோவில் ஆகிய வற்றின் இறுதிக் கோட்டையை இலக்குவைக்கிறது.
1948ஆம் ஆண்டின் பின்னர் 1,800 ஆலயங்களையும் பாரம்பரியங்களையும் அழித்த பின்னர் இது இடம்பெறுகின்றது. இலங்கையின் வட பகுதியில் அதிகளவு மதிப்புக்குரியதாகக் காணப்படும் கீரிமலை பகுதியில் காணப்பட்ட ஐந்து நூற்றாண்டுகால வரலாற்றை கொண்டுள்ள ஆதிசிவன் ஆலயம் இராணுவ ஆக்கிரமிப்பு என்ற போர்வையில் அழிக்கப்பட்டுள்ளதை ஆழ்ந்த கரிசனையுடனும் அவசரத்துடனும் நாங்கள் உங்களுக்கு தெரியப்படுத்துகின்றோம்.
இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் போது இராணுவம் அந்தப்பகுதியைமிக நீண்டகாலம் தனது கட்டுப் பாட்டின் கீழ் வைத்திருந்த பின்னர், பொது மக்களை அங்கு செல்ல அனுமதித்த வேளையே இது தெரியவந்தது. கோவிலையும், துறவிகளின் சமாதியையும் அழித்துவிட்டு அது இருந்த இடத்தில் ஜனாதிபதி மாளிகையை கட்டியுள்ளனர்.இதன் மூலம் இந்துக்கள் இறந்தவர்களுக்கு வழங்கும் இறுதி மரியாதையின் புனிதத்தை சீர்குலைத்துள்ளனர்.
2015இல் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்த பகுதிக்கு அருகில் உள்ள நகுலேஸ்வரம் ஆலயத்துக்கு சென்று
பூசை வழிபாடுகளில் ஈடுபட்டார்.இலங்கையில் உள்ள இந்து பாரம்பரியம், கலாசாரத்தின் இறுதிச் சின்னமாக காணப்படுபவற்றை அழிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் இலங்கை
அரசாங்கம் செயல்படுகின்றது.
இலங்கை அரசாங்கத்தை பொருளாதார நெருக்கடியிலிருந்து இந்தியாவும் சர்வதேச சமூகமும் பிணையெடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளபோதிலும் இது இடம்பெறுகின்றது.புனித பொருள்களை அவமதிக்கும் இந்த செயல் இடம்பெற்ற சில காலத்துக்குள் கிழக்கு மாகாணத்தின் திருகோணமலையில் உள்ள இந்துக்களின் புனிதபகுதியான கன்னியா வெந்நீரூற்றை அநுராதபுர நகரத்துடன் தொடர்புடையது என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. அதனை இராணுவம் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.
முல்லைத்தீவு குருந்தூர் மலையில் உள்ள ஆதி சிவன் ஐயனார் கோவில் அழிக்கப்பட்டுள்ளது. வவுனியா வெடுக்கு நாறிமலையில் உள்ள ஆலயத்தின் விக்கிரகங்கள் உடைக்கப்பட்டன – களவாடப்பட்டன.
இலங்கைக்கான சர்வதேச உதவிகளை நாங்கள் வரவேற்கும் அதேவேளை, இலங்கையில் இந்து பாரம் பரியம் – கலாசாரம் ஆகியவற்றை அழிக்கும் தனது நிகழ்ச்சி நிரலுக்கு இலங்கை அரசாங்கம் இந்த உதவியை பயன்படுத்த நிதி வழங்கும் சமூகம் அனுமதிக்கக்கூடாது என நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம்.
இந்து மத கலாசாரம் அழிக்கப்படுவதை தடுப்பதற்காக இலங்கையின் வட,கிழக்கு பகுதிகளில் சர்வதேச பாதுகாப்பு பொறிமுறையை அமைக்க வேண்டும் என்று இலங்கை அரசாங்கத்தை நிதி
வழங்கும் சமூகம் வலியுறுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றோம் – என்றுள்ளது.