3.5 லட்ச ரூபாய்க்கு மேல் நிலுவையில் உள்ள தொகையை வசூல் செய்ய சென்ற மின்துறை அதிகாரிகளை ஒரு குடும்பத்தினர் இரும்புக் கம்பியால் தாக்கியதுடன் நாய்களை அவிழ்த்து விட்டு கடிக்க விட்டு துப்பாக்கியைக் காட்டி விரட்டிய சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசம், புலந்த்சாகரில் உள்ள கியான் லோக் காலனியைச் சேர்ந்தவர் ராஜேந்திர சவுத்ரி. இவரது மனைவி கவிதா. இவர்களது மகன் விஷால். இவர்கள் 3.5 லட்ச ரூபாய்க்கு மேல் மின் கட்டணம் கட்டாமல் பாக்கி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.இதையடுத்து பாசிமாஞ்சல் வித்யுத் வித்ரன் நிகம் லிமிடெட் (PVVNL) மின்துறையைச் சேர்ந்த ஜூனியர் இன்ஜினியர் ஜோதி பாஸ்கர் சின்ஹா, துணைப் பிரிவு அதிகாரி ரீனா, ஊழியர்கள் சுதீர் குமார் மற்றும் முகமது இக்பால், ஓட்டுநர் முகமது இர்ஷாத் ஆகியோர் அடங்கிய குழு ராஜேந்திர சவுத்ரியின் வீட்டிற்கு நேற்று சென்றது.
அப்போது ராஜேந்திர சவுத்ரி மின் கட்டணத்தைச் செலுத்த மறுத்துள்ளார். இதனால் அவருக்கும், மின்துறை அதிகாரிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ராஜேந்திர சவுத்ரி, அவரது மனைவி கவிதா, மகன் விஷால், அவரது நண்பர் மின்துறை அதிகாரிகளை இரும்புக் கம்பியால் தாக்கினர்.
அத்துடன் வீட்டில் கட்டி வைத்திருந்த இரண்டு நாய்களை ராஜேந்திர சவுத்ரி அவிழ்த்து விட்டார். அந்த நாய்கள், மின்துறை அதிகாரிகள், ஊழியர்களைக் கடித்துள்ளது. அத்துடன் துப்பாக்கியைக் காட்டி மின்துறை அதிகாரிகளை ராஜேந்திர சவுத்ரி விரட்டியுள்ளார்.
இந்த சம்பவத்தால், காயமடைந்த மின்துறை அதிகாரிகள் புலந்த்சாகரில் உள்ள காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இதையடுத்து காயமடைந்த அவர்கள், காவல் துறையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து புலந்த்சாகர் எஸ்.பி சுரேந்திர நாத் திவாரி கூறுகையில், “ஐபிசி பிரிவுகள் 289 (விலங்குகள் தொடர்பாக அலட்சியமாக நடந்துகொள்வது), 323 மற்றும் 324 (தன்னிச்சையாக காயப்படுத்துதல்), 504 மற்றும் 506 (குற்ற மிரட்டல்) ஆகியவற்றின் கீழ் ராஜேந்திர சவுத்ரி உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை தனிப்படை தீவிரமாக தேடி வருகின்றனர் என்றனர்.
மின் பாக்கியை வசூலிக்கச் சென்ற அதிகாரிகள், ஊழியர்களைத் தாக்கியதுடன் துப்பாக்கியைக் கட்டி மிரட்டி நாய்களை விட்டு கடிக்க வைத்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.