ஜேவிபியை பிழையென்று பிரசாரம் முன்னெடுக்கும் தமிரசுக்கட்சி ஜேவிபியின் ஐக்கிய இராச்சியத்திற்கு ஆதரவு வழங்குகின்றது.
அவ்வாறானால் ஜேவிபி பிழையென்றால் ஜேவிபியின் கொள்கையினை கொண்டு செல்லும் தமிழரசுக்கட்சி சரியா என்பதை மக்கள் சிந்திக்கவேண்டும் என அகில இலங்கை தமிழ் காங்கிரசின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
கல்குடா தேர்தல் தொகுதியில் ஏறாவூர்ப்பற்று பிரதேசசபைக்கான வேட்பாளர் அறிமுக கூட்டம் நேற்று (22) மாலை களுவன்கேணியில் நடைபெற்றது.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி மற்றும் தமிழ் மக்கள் பேரவை என்பன இணைந்து இம்முறை கிழக்கில் உள்ளுராட்சிமன்ற தேர்தலில் களமிறங்கியுள்ளனர்.

இதன் கீழ் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் அறிமுக கூட்டம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் அகில இலங்கை தமிழ் காங்கிரசின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ் மக்கள் பேரவையின் தலைவர் சிரேஸ்ட சட்டத்தரணி சிறிக்காந்தா, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செ.கஜேந்திரன், முன்னணியின் உறுப்பினர் சட்டத்தரணி சுகாஸ் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது கருத்து தெரிவித்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இறுதியாக நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல் தமிழ் மக்களை தமிழ் தேசிய நிலைப்பாட்டிலிருந்து விலகவைத்துள்ளதாக இலங்கையில் உள்ள தூதரகங்கள் கூறிவருகின்றன.

அதற்கு பலவிதமான பதில்களை சொல்லிவருகின்றோம்.மக்கள் சக்தி என்ற பெயரில் ஆட்சி செய்கின்ற ஜேவிபி என்கின்ற அமைப்பு வடகிழக்கில் தமிழ் மக்களின் ஆணையைப்பெறவில்லையென்பதை தெளிவாக கூறிவருகின்றோம்.
அடுத்த தேர்தலில் தமிழ் மக்கள் தங்களது தமிழ் தேசிய கொள்கையில் உறுதியாக நிற்கின்றார்கள் என்பதை தெளிவாக வெளிப்படுத்தச் சொல்லுங்கள் என்று எங்களிடம் பல்வேறு நாட்டின் தூதரகங்கள் கோரியுள்ளன.
ஜேவிபியினர் தெற்கில் 70வீதமான வாக்கினைப்பெற்றவர்கள். அ.தே.அலை வடகிழக்கின் தமிழர் தாயப்பகுதியிலும் கூட அவர்களுக்கான ஆதரவு கிடைத்திருக்கலாம் என்பதில் நியாயமுள்ளது. அதனை முறியடிக்கும் பொறுப்பு எங்களிடமே இருக்கின்றது. என்றார்





