இலங்கையில் விவாகரத்து பெறுவதை மிகவும் எளிதாக்கும் மூன்று வரைவு யோசனைகள் அடுத்த மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளன.
திருமண காரணங்கள் சட்டம், வெளிநாட்டு விவாகரத்து தீர்ப்புகளை அங்கீகரிக்கும் சட்டம் மற்றும் சிவில் நடைமுறை சட்டத்தில் திருத்தம் ஆகியவை தொடர்பிலேயே யோசனைகள் முன்வைக்கப்படவுள்ளன.
இந்த சட்டங்கள் தற்போது விவாகரத்து பெறுவதற்கான காரணங்களை கடுமையாக கட்டுப்படுத்தி வருகின்றன என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தற்போது, விவாகரத்து கோருபவர்கள் நீதிமன்றத்தில் மூன்று காரணங்களில் ஒன்றை நிரூபிக்க வேண்டும், மூன்றாம் தரப்பினருடன் மனைவியால் தகாத முறையில் ஈடுபடுதல், தீங்கிழைக்கும் துறவு அல்லது ஆண்மையின்மை போன்ற விடயங்களே அவையாகும்.
எனினும் இந்த காரணங்களை நிரூபிப்பது மிகவும் கடினம் என்பதால் விவாகரத்து வழக்குகள் 10-20 ஆண்டுகள் வரை விசாரணை செய்யப்படுவதாக நீதி அமைச்சர் கூறியுள்ளார்.
எனினும் புதிய சட்டம், கணவன் மனைவி காணாமல் போனவர்களுக்கு விவாகரத்து விடயங்களை எளிதாக்கும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.