நாளுக்கு நாள் அதிகரித்துவரும் வாகன விபத்துக்களை தடுத்து, வீதிகள் அனைவருக்கும் பாதுகாப்பான இடங்களாக மாற்றுவதற்காக பாடசாலை மாணவர்களை அடிப்படையாக கொண்ட “Take Care – வீதிகளைப் பாதுகாப்போம்” எனும் தலைப்பிலான தெளிவுபடுத்தல் திட்டத்தை பாடசாலை மட்டத்தில் அமுல்படுத்த திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மேற்குறித்த திட்டம் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு, ஸ்ரீலங்கா பொலிஸ் மற்றும் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து அமுல்படுத்தவதற்கு வரையறுக்கப்பட்ட சுயாதீன தொலைக்காட்சி வலையமைப்பு திட்டமிட்டுள்ளது.
பாடசாலை வாகன ஒழுங்குபடுத்தல் அணிகள் மற்றும் மாணவ தலைவர்களை இணைத்து, 100 கல்வி வலயங்களில் உத்தேசதிட்டம் அமுல்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு கல்வி வலயத்திலிருந்து தலா 500 மாணவர்கள் என்ற ரீதியில் 50,000 மாணவர்களை நேரடியாக நிகழ்ச்சித்திட்டத்தில் இணைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சின் மேற்பார்வையில் தொடர்புடைய நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் வரையறுக்கப்பட்ட சுயாதீன தொலைக்காட்சி வலையமைப்பு மூலம் உத்தேச திட்டத்தை அமுல்படுத்துவதற்கு சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.