புலம்பெயர் தமிழர்கள் என்ற அடையாளத்திலிருந்து விடுபட்டு ‘புலம்பெயர் இலங்கையர்கள்’ என்ற அடையாளத்தினை உறுதிப்படுத்துங்கள் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச உலகத் தமிழர் பேரவையினரிடத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதன்போது, புலம்பெயர் இலங்கையர்கள் என்ற அடையாளத்தினை உறுதிப்படுத்தவதற்கு நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளதாகவும், அதற்கான முதல் படியே இமயமலை பிரகடனம் என்றும் உலகத் தமிழர் பேரவையினர் பதிலளித்துள்ளனர்.
உலகத் தமிழர் பேரவை மற்றும் சிறந்த இலங்கைக்கான சங்க மன்றம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தலைமையிலான எதிரணியின் பங்காளிகளுக்கும் இடையில் நேற்று செவ்வாய்க்கிழமை (12) எதிர்க்கட்சித் தலைவரின் இல்லத்தில் சந்திப்பு நடைபெற்றது.
இதில், பேராசிரியர்.ஜீ.எல்.பீரிஸ், லஷ்மன் கிரியெல்ல, ரஞ்சித் மத்தும பண்டார, ஏரான் விக்கிரமரட்ன, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், திகாம்பரம், உதயகுமார், வேலுகுமார், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், தௌபிக் மற்றும் இலங்கை தமிழரசு கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது, உலகத் தமிழர் பேரவையினால் இமயமலை பிரகடனம் கையளிக்கப்பட்டதோடு, அதனை செயற்பாட்டு ரீதியில் வெற்றி பெறச் செய்வதற்கான ஆழமான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டன.
மதிய போசன விருந்துபசாரத்துடன் நடைபெற்ற குறித்த கலந்துரையாடல் தொடர்பில் உலகத்ச தமிழர் பேரவையின் ஊடகப் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் தெரிவிக்கையில்,
சஜித் பிரேமதாசவுடன் நடைபெற்ற சந்திப்பானது மிகவும் முக்கியமானதாக அமைந்தது. அவரது தலைமையிலான எதிரணியின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களான மனோ கணேசன், ரவூப் ஹக்கீம் மற்றும் முக்கிய உறுப்பினர்களும் பங்கேற்றிருந்தனர்.
இந்த நிலையில், அவருடனான உரையாடலின்போது, இமயமலை பிரகடனத்தை நான்கு பீடாதிபதிகளுக்கும் கையளித்து அவர்களிடமிருந்து ஆதரவினையும், ஆசீர்வாதத்தினையும் பெற்றுக்கொண்டமையானது முக்கியமானதொரு விடயம் என்று சுட்டிக்காட்டினார்.
அத்தோடு குறித்த பிரகடனத்தின் உள்ளடகத்தில் காணப்படும் விடயங்களில் மூன்றில் இரண்டு பகுதியானது தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் காணப்படுவதால் அதனை ஏற்றுக்கொள்வதில் எந்தவிதமான தடைகளும் இல்லை என்றும் குறிப்பிட்டார்.
அதேநேரம், ஒருசில விடயங்கள் சம்பந்தமாக இன்னமும் ஆழமான கலந்துரையாடல்கள் அவசியமாக இருப்பதாக கூறியதோடு, அதற்கான முன்னெடுப்புக்களில் ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிரணியினர் முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்குவார்கள் என்றும் கூறினார்.
இதேநேரம், அவரைப் பொறுத்தவரையில், அனைவரும் இலங்கையர்கள் என்ற அடையாளத்தினை உறுதி செய்து அனைத்தின பிரஜைகளும் சமமானவர்கள் என்பதை நிலைநிறுத்துவதே இலக்காக உள்ளதாக குறிப்பிட்டார்.
அந்த வகையில், புலம்பெயர் தமிழர் அமைப்பு என்பது புலம்பெயர் இலங்கையர் அமைப்பு என்ற அடையாளத்தினையே பிரதிநிதித்துவம் செய்ய வேண்டும் என்று எம்மிடம் எதிர்பார்ப்பதாகவும், அதனை ஒரு முக்கிய கோரிக்கையாக முன்வைப்பதாகவும் தெரிவித்தார்.
அச்சமயத்தில், புலம்பெயர் இலங்கையர் என்றோ அல்லது உள்நாட்டில் இலங்கையர்கள் என்ற அடையாளத்தினை உறுதிப்படுத்துவதற்கோ நாமும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதோடு, அந்த அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கு நீண்ட பயணம் அவசியமாக உள்ளது. அந்தப் பயணத்தின் முதல் கட்டமாகவே இமயமலை பிரகடனம் காணப்படுகிறது என்ற விடயத்தினை சுட்டிக் காண்பித்தோம் என்றார்.