காலணித்துவ இராணுவ நீதிமன்றத்தின் தீர்ப்பின் பிரகாரம் 108 ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற எட்வெட் ஹென்றி பேதிரிஸ் படுகொலை தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதற்கு விசேட குழுவொன்றை நியமிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இலங்கையில் காலணித்துவ ஆட்சியின் கீழ் அரசுக்கு எதிரான கிளர்ச்சிகள், கலவரங்கள் மற்றும் அரசுக்கு எதிராக துரோகம் இழைத்ததென தெரிவித்து இராணுவ நீதிமன்றத்தால் குற்றஞ்சுமத்தப்பட்டு, குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு, 27 வயதான எட்வெட் ஹென்றி பேதிரிஸ்க்கு 1915.07.07 அன்று இவ்வித மேன்முறையீடுகளும் பெறப்படாமல் மரண தண்டனை வழங்கப்பட்டது.
உயிரிழந்த எட்வெட் ஹென்றி பேதிரிஸின் பூதவுடல், இராணுவச் சட்டத்தின் கீழ் குற்றவாளியெனத் தீர்ப்பளிக்கப்பட்ட ஒருவரின் இறுதிக்கிரியைகளுக்கான நடபடிமுறைகளுக்கமைய, வெளிப்படுத்தாத வளாகமொன்றில் தகனம் செய்யப்பட்டுள்ளது. அவருடைய கொலை அப்போது எமது நாட்டை ஆட்சி செய்த உயர் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட திட்டத்தின் விளைவு என பின்னர் கண்டறியப்பட்டுள்ளது.
அதற்கமைய குறித்த படுகொலை தொடர்பான உண்மையான தகவல்களைக் கண்டறிந்து அவருக்கு நீதி வழங்குவதற்காக குறித்த விடயங்களை ஆராய்ந்து அமைச்சரவைக்கு பரிந்துரைகளுடன் கூடிய அறிக்கையொன்றைச் சமர்ப்பிப்பதற்காக ஓய்வுநிலை உயர்நீதிமன்ற நீதியரசர் அனில் குணரத்ன தலைமையிலான மூவர் அடங்கிய குழுவொன்றை நியமிப்பதற்காக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.