பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் ஊழியர்கள் பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட நாளில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவிடம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் பாராளுமன்றத்தில் வைத்து அமைச்சரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.
கடந்த மார்ச் மாதம் 28ஆம் திகதி கொலன்னாவையில் உள்ள சிலோன் பெட்ரோலியம் சேமிப்பக டெர்மினல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் இருந்து எரிபொருள் விநியோகத்தை சீர்குலைத்த நபர்களுக்கு எதிராக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் ஊடாக விசாரணை நடத்துமாறு அமைச்சர் கஞ்சன விஜேசேகரவினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைவாக இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதற்கு மேலதிகமாக சம்பவத்தின் சாட்சியாளர்களிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் பௌசர்கள் புறப்படுவதற்கு சந்தர்ப்பத்தை வழங்காமை, விமான நிலையங்களுக்கான எரிபொருள் விநியோகத்திற்கு தடை ஏற்படுத்தியமை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இதனூடாக விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
எரிபொருள் விநியோகத்தை முன்னெடுப்பதற்கு 03 தனியார் நிறுவனங்களுக்கு அனுமதியளிப்பதாக தெரிவித்து பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் ஊழியர்கள் கடந்த நாட்களில் பணி பகிஷ்கரிப்பை முன்னெடுத்ததுடன், சுமார் 20 ஊழியர்களுக்கு கட்டாய விடுமுறை வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.